டெல்லியில் ஓ.பி.எஸ் - அமித் ஷா சந்திப்பு: 20 நிமிட அவசர ஆலோசனையின் உள்நோக்கம் என்ன?
தனது அரசியல் கட்சியைப் பதிவு செய்ய டெல்லி சென்றிருந்த ஓபிஎஸ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 20 நிமிடங்கள் சந்தித்து பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக டெல்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் தமிழக பா.ஜ.க.வுக்கும் இடையே கூட்டணி வலுப்பெற்று வருவதால், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அதிரடியாக விலகிய நிலையில், இந்தச் சந்திப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இந்தச் சந்திப்பு அமித் ஷாவின் நேரடி அழைப்பின் பேரில் நடந்ததாகவும், ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கினால் பா.ஜ.க.வுடன் நிச்சயம் கூட்டணி வைக்க வேண்டும் என அமித் ஷா உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது அவரைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கோரியிருந்தார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த ஓபிஎஸ், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்ததுடன், அதன் பின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்புகள் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்தபோது, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரிடம் பா.ஜ.க. கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று தொலைபேசி மூலம் கேட்டதாகக் கூறியிருந்தார். ஆனால், ஓபிஎஸ் தரப்பு இதை மறுத்ததுடன், நயினார் நாகேந்திரனை ஆறு முறை தொடர்புகொண்டும் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது. மோதலைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததால், தமிழக அரசியல் வட்டாரத்தில் இதன் விளைவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: காற்று மாசால் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! இனி இவங்களுக்கெல்லாம் WFH..!!
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கி தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார் என்று அரசியல் அரங்கில் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டன. இந்தச் சூழ்நிலையில்தான் ஓபிஎஸ் அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துள்ளது. இந்தச் சந்திப்பின் நோக்கம், வரவிருக்கும் தேர்தலில் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கினாலும் பா.ஜ.க.வின் ஆதரவு கூட்டணியில் அவர் நீடிக்க வேண்டும் என்பதை உறுதிசெய்வதே என்று உச்சகட்ட தகவல் கசிந்துள்ளது.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! காற்றின் தர குறியீடு எவ்ளோ தெரியுமா..??