தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!
அமைச்சர் அலுவலகங்களில், பல்வேறு நிலைகளில் பணிபுரிவதற்கு, 10,000 அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மனு அளித்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அமைச்சர்களின் அலுவலகங்களில் பணியாற்ற 10,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மனு அளித்துள்ளனர். இது தற்போது அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிதி, வருவாய், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட 41 துறைகள் உள்ளன. வழக்கமாக 30 முதல் 33 அமைச்சர்கள் வரை நியமிக்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு அமைச்சரின் அலுவலகத்திலும் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், மூத்த உதவியாளர், சிறப்பு உதவியாளர், கணினி தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் உள்ளன.
கடந்த ஐந்தாண்டு தி.மு.க. ஆட்சியில் 33 அமைச்சர்களின் அலுவலகங்களில் சுமார் 120 பேர் பணியாற்றி வந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அவர்கள் தங்கள் பழைய துறைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போது தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் முதல்வர் விஜய் அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் இப்பிடி இருப்பாருனே எதிர்பாக்கல! ஸ்ட்ரிக்ட் முதல்வர்!! அரசு அதிகாரிகள் பாராட்டு!
தற்போது 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் அமைச்சர் அலுவலகங்களில் பணியாற்றுவதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் அலுவலகத்திலும் பணியாற்ற ஏராளமான அதிகாரிகள் விருப்பம் தெரிவித்தனர். பொதுத் துறை பரிசீலனைக்குப் பின், வருவாய்த் துறையில் பணியாற்றிய பிரேம்குமார் முதல்வர் அலுவலக இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறையின் குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் செந்தில்குமார், தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் பழனிசாமி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் அருண் சுவேதாம்பரா ஆகியோர் துணைச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, ஐந்து பிரிவு அலுவலர்கள், இரு உதவி பிரிவு அலுவலர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் முதல்வர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய அரசு அமைந்ததில் இருந்து அதிகாரிகளிடையே பணி மாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வர் விஜய்யின் அலுவலக நியமனங்கள் சீரான மற்றும் திறமையான நிர்வாகத்துக்கு அடித்தளம் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை! புதிய முதலீடுகளை ஈர்க்க திட்டம்!