×
 

திமுக-வா? தவெக-வா? குழம்பி தவிக்கும் காங்.,!! முதல்வர் ஸ்டாலினுடன் பா.சிதம்பரம் திடீர் சந்திப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் சந்தித்து பேசினார். இந்த ஆலோசனை 10 நிமிடம் நிடித்தது.

சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆளும் திமுக கூட்டணியில் முக்கிய இடம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. 

இதற்கிடையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்ததாகத் தெரிகிறது.

தமிழகத்தில் தேர்தல் களம் ஏற்கனவே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் காங்கிரஸ், தமிழ் வெற்றிக் கழகம் (தவெக) உடன் தனிக்கூட்டணி அமைக்கப்போவதாகச் செய்திகள் பரவின. ஆனால், காங்கிரஸ் தரப்பில் இதை உறுதியாக மறுத்தனர். 

இதையும் படிங்க: ரூ.3,000மா? ரூ.5,000மா? பொங்கல் பரிசு ரொக்கம் எவ்வளவு? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

அதன்பிறகு, காங்கிரஸ் மேலிடம் தமிழக கூட்டணி பேச்சுவார்த்தைக்காக கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்தக் குழு கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து பேசியது. இது காங்கிரஸ் - தவெக கூட்டணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகக் கருதப்பட்டது.

இதற்கிடையில், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “தேர்தலில் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆட்சியில் பங்கு அவசியம்” என்று பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அமைச்சர் பதவிகள் கோருவதுபோல் அமைந்தது.

இந்தச் சூழலில் நடைபெற்ற ப. சிதம்பரம் - மு.க. ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்), தற்போதைய அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசியதாகத் தெரிகிறது. குறிப்பாக, கிரிஷ் சோடங்கர் ஆட்சிப் பங்கு குறித்து பேசியது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. தற்போதைய சந்திப்பு கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்கான அடையாளமாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் இதுபோன்ற உயர்மட்டச் சந்திப்புகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கேட்டது ரூ.24, 673 கோடி! தந்தது ரூ.4,136 கோடி! பேரிடர்களுக்கு நிவாரண நிதி குறித்து ஸ்டாலின் தடாலடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share