×
 

"நெல் கொள்முதல் நிலைய லஞ்ச ஒழிப்புக்கு அதிரடி உத்தரவு": இடைத்தரகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் சாட்டை!

தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நடக்கும் லஞ்சம் மற்றும் இடைத்தரகர்கள் சுரண்டலுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC) விவசாயிகளிடம் சட்டவிரோதமாகப் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்பு விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்த  உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஏ. வெங்கடேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாபெரும் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அணுகும் அப்பாவி விவசாயிகளிடம் இடைத்தரகர்களின் தலையீடு அசுர அளவில் அதிகரித்துள்ளது. கொள்முதல் நிலையங்களில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் 'டோக்கன் நடைமுறையை' (Token System) முழுமையாக நீக்க வேண்டும். இந்த நடைமுறையைச் சாதகமாக்கிக் கொண்டு, விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டி சட்டவிரோதமாகப் பணம் பறிக்கும் புரோக்கர்கள் மற்றும் லஞ்சப் பேர்வழிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி. எல். விக்டோரியா கவுரி அவர்கள், மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள லஞ்சப் புகார்களின் தீவிரத்தை முழுமையாக ஒப்புக்கொண்டார். "நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பறிக்கப்படுவதாகக் கூறப்படும் இந்த குற்றச்சாட்டுகள் மிகத் தீவிரமானவை" என்று குறிப்பிட்ட நீதிபதி, இதுகுறித்து மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் போர்க்கால அடிப்படையில் முழுமையாகப் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

இதையும் படிங்க: லஞ்ச ஊழலுக்கு இடமே இல்லை: மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

மேலும், இந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தி தகுந்த சட்டப்பூர்வ உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு தமிழகக் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு (DVAC) நீதிபதி விக்டோரியா கவுரி தனது தீர்ப்பில் அதிரடியாக சாட்டையைச் சுழற்றியுள்ளார். புதிய தவெக அரசு கூட்டுறவு மற்றும் உணவுத் துறைச் செயலாளராகப் ப. அமுதா ஐஏஎஸ் அவர்களை நியமித்த சில மணி நேரங்களிலேயே, நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருப்பது கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: “மழை ஆபத்து நீங்கியது!” வலுவிழந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை மையம் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share