×
 

பாகிஸ்தானில் ராணுவத்தின் அதிரடி ஆபரேஷன்... 24 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; ஆயுதக் குவியல் பறிமுதல்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையில், 24 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டில் பாதுகாப்பு சூழலை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட தகவலின்படி, பன்னு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உளவுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் விரிவான தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

தேடுதல் நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதம் ஏந்திய குழுவினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் டபுள் பேரிடி... சில்லு சில்லாய் சிதறும் பாகிஸ்தான்... அடி மேல் அடி வாங்கும் ஷெரீப் அரசு...!

இந்த மோதலில், 24 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது. உயிரிழந்தவர்கள் பொதுமக்கள் மீது பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் எனவும், அவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. (இந்தக் கூற்றுகளை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.)

இந்த நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் நவீன துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் பிற ஆயுதங்கள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் மேலும் யாரேனும் ஆயுதக் குழுவினர் பதுங்கியிருக்கிறார்களா என்பதை கண்டறிய கூடுதல் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த வெற்றிகரமான நடவடிக்கைக்காக பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை விமர்சித்த பாக்., அமைச்சர்! செஷல்சின் உயரிய விருது!! வலுக்கும் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share