முதல்வர் விஜய்க்கு பாகிஸ்தான் இன்ப்ளூயன்ஸர்கள் ஆதரவு? மத்திய உளவுத்துறை தீவிர கண்காணிப்பு!
பாகிஸ்தானைச் சேர்ந்த சில சமூக வலைதள கணக்குகளில் முதல்வர் விஜய் தொடர்பான பதிவுகள் வெளியாகியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலங்கள் பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உளவுத்துறை கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியலில் சமூக வலைதளங்கள் மற்றும் ரீல்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதற்கிடையே, விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை பாராட்டியும், அவர் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என்றும் கூறும் வகையிலான வீடியோக்கள் தமிழகத்திற்கு வெளியே உள்ள சமூக வலைதள பிரபலங்களால் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விஜய்யின் தனிச்செயலர் ஜெகதீஷுடன் தொடர்புடையதாக கூறப்படும் ‘தி ரூட்’ விளம்பர நிறுவனத்தின் பெயரும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு அந்த நிறுவனத்தின் தரப்பில் இதுவரை தெளிவான மறுப்பு வெளியாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!
இதற்கிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த சில சமூக வலைதள கணக்குகளில் விஜய் தொடர்பான பதிவுகள் வெளியாகியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, ‘ஸ்க்ரோல் பாகிஸ்தான்’ என்ற முகநூல் பக்கத்தில் விஜய் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்பான கருத்துகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தானில் உள்ள முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களுடன் விஜய் புகைப்படங்களை பயன்படுத்திய பல்வேறு சமூக வலைதள கணக்குகள் புதிதாக உருவாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பக்கங்கள் ஏற்கனவே இருந்த கணக்குகளின் பெயரை மாற்றி விஜய் தொடர்பான உள்ளடக்கங்களை வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து மத்திய உளவுத்துறை கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் லைக், பார்வை மற்றும் ஃபாலோவர்களை அதிகரிப்பதற்காக போலியான கணக்குகள் உருவாக்கப்படுவது ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த கணக்குகள் வெறுமனே சமூக வலைதள பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டவையா அல்லது தமிழகத்தில் இருந்து யாரேனும் நேரடியாக தொடர்பு கொண்டு செயல்படுகிறார்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சமூக வலைதள கணக்குகள் மூலம் அரசியல் பிரசாரம் நடைபெறுவதாக கூறப்படும் விவகாரம் தற்போது அரசியல் சர்ச்சையைத் தாண்டி பாதுகாப்பு கோணத்திலும் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!