×
 

அசிம் முனீருக்கு உச்சபட்ச அதிகாரம்! பாக்., முப்படைகளின் தலைவராக நியமனம்! இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து!

பாகிஸ்தானில் ராணுவம், விமானம், கடற்படைகளை இணைத்து முப்படைகளின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் அசிம் முனீர்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருக்கு நாட்டின் முதல் ‘பாதுகாப்புப் படைத் தலைவர்’ (Chief of Defence Forces - CDF) என்ற சக்திவாய்ந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவம், விமானப்படை, கடற்படை என மூன்று படைகளையும் ஒரே ஆணையின் கீழ் கொண்டு வரும் அதிகாரம் அசிம் முனீருக்கு கிடைத்துள்ளது. 

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அசிம் முனீரை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு CDF-ஆக நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தியாவின் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ தாக்குதலால் பாகிஸ்தான் படைகள் பின்னடைவு அடைந்த நிலையில், அனைத்து படைகளையும் ஒருங்கிணைத்து வலுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, அரசியல் சாசனத்தின் 243வது பிரிவில் 27வது திருத்தம் கொண்டு வந்து இந்த புதிய பதவியை உருவாக்கியது. இதன் மூலம் இதுவரை அதிபரிடமும் அமைச்சரவையிடமும் இருந்த முப்படை கட்டுப்பாட்டு அதிகாரம் இனி அசிம் முனீரிடம் சென்றுள்ளது. அசிம் முனீரின் ராணுவத் தளபதி பதவிக்காலம் கடந்த நவம்பர் 29-ல் முடிவடைந்த நிலையில், இந்த திருத்தத்தால் அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: பாக்., அரசியலில் பெரும் திருப்பம்! இந்தியாவுக்கு எதிராக கொக்கரித்தவனிடம் அதிகரிக்கும் பவர்!

இந்தியாவின் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலால் பாகிஸ்தான் படைகள் கடும் பின்னடைவை சந்தித்தன. ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தான் படைகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான எதிர்கால தாக்குதல்களுக்கு இது வலுவான அடித்தளம் அமைக்கும் என்று பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் கருதுகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க், இந்த அரசியல் சாசன திருத்தம் நீதித்துறை சுதந்திரத்தை பாதிக்கும் என்று எச்சரித்திருந்தார். ஆனால் பாகிஸ்தான் அரசு அதை பொருட்படுத்தவில்லை. இந்த முடிவு, பாகிஸ்தானில் ராணுவத்தின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. அசிம் முனீர் இப்போது பாகிஸ்தானின் மிக சக்திவாய்ந்த நபராக மாறியுள்ளார்.

இந்தியாவுக்கு இது புதிய அச்சுறுத்தல். பாகிஸ்தான் படைகள் ஒருங்கிணைந்து செயல்படும் நிலையில், எல்லைப் பிரச்சனைகள், தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய ராணுவமும் உளவுத்துறையும் இதை கவனமாக கண்காணித்து வருகின்றன. பாகிஸ்தானின் இந்த முடிவு, தெற்காசிய பாதுகாப்பு சமநிலையை மாற்றும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியா எங்கள் முக்கிய கூட்டாளி!! இணைந்து செயல்படுவோம்! புடின் வருகையால் இறங்கி வரும் ட்ரம்ப்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share