×
 

போலீஸ் பாதுகாப்பு வேணும்!! பெட்ரோல் பங்குகளில் முந்தியடிக்கும் கூட்டம்! பங்க் உரிமையாளர்கள் பதற்றம்!

பெட்ரோல் பங்க்குகளில் நிலவும் செயற்கை தட்டுப்பாடு, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் பங்க்குகளில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு ஈரான் மீதான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பாதை பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபட்டுள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தி சமூக ஊடகங்களில் பரவியது. 

இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்து பெட்ரோல் பங்க்குகளுக்கு படையெடுத்தனர். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீண்ட வரிசைகள் அமைந்தன. பலர் வாகன டேங்க் நிரப்பிய பிறகும் கேன்கள், பாட்டில்களில் பெட்ரோல்-டீசலை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் (TNPD) உடனடியாக விளக்கம் அளித்தன. மாநிலத்தில் உள்ள சுமார் 7,000 பெட்ரோல் பங்க்குகளில் 21 நாட்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது என்றும், விநியோகத்தில் எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்தன. 

இதையும் படிங்க: இதோ ஆரம்பிச்சிட்டாங்கல்ல!! பெட்ரோல் விலை உயர்வு! 95 நாடுகள் அதிரடி முடிவு!

வதந்திகளால் ஏற்பட்ட செயற்கை தேவை காரணமாகவே கூட்டம் அதிகரித்துள்ளதாகவும், இது தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதாகவும் எச்சரித்தன. பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.பி. முரளி, “வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்க முடிவு செய்துள்ளோம். கேன்களில் வாங்கிச் செல்வதை தடை செய்துள்ளோம். பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், சில இடங்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து, பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் டிஜிபி-க்கு கடிதம் எழுதியுள்ளது. “பெட்ரோல் பங்க்குகளில் நிலவும் செயற்கை தட்டுப்பாடு மற்றும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். குறிப்பாக நகர்ப்புற பெட்ரோல் நிலையங்களில் தலா ஒரு காவலரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளது.

முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களை அமைதியாக இருக்குமாறு வேண்டியுள்ளனர். எரிபொருள் விநியோகம் சீராக உள்ளதால், தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். போர் பதற்றம் தொடரும் நிலையில், வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “மோடி அலை வீசலைங்க, அனல் காத்து தான் வீசுது...” - வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் கலகல பேச்சு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share