×
 

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்! மீனவர்களுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை! புதிய திருப்பம்!

எதிர்ப்பு தெரிவித்து வரும் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு மீனவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களின் கருத்துகளை நேரடியாக கேட்க முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கம், ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 25.55 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கவும், இதற்கான மதிப்பீடு ரூ.1,200 கோடியாகவும் அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மீனவ குடியிருப்புகளில் எதிர்ப்பு எழுந்துள்ளது. புதிய அரசு வளாகம் அமைக்கப்பட்டால் தங்களது பாரம்பரிய தொழில், கடலுக்கான அணுகல் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என மீனவர் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. மேலும், திட்டம் தொடர்பாக தங்களிடம் போதிய ஆலோசனை நடத்தப்படவில்லை என்றும் சில மீனவர் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

இதற்கிடையில், திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்களை நடத்துவது குறித்தும் மீனவர் அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன.

இந்த சூழலில், எதிர்ப்பு தெரிவித்து வரும் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து முதல்வர் விஜய் தலைமையில் மீனவர்களின் கருத்துகள் கேட்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீனவர் அமைப்புகளுடனான ஆலோசனைக்குப் பிறகே திட்டத்தை தற்போதைய இடத்தில் தொடர்வதா, மாற்று வழியை பரிசீலிப்பதா என்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டம் தொடர்பான அடுத்த அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் எதிர்நோக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: மீனவர்களை எதிர்த்து தலைமைச் செயலகம் கட்டினால், அது மீண்டும் மருத்துவமனையாகத்தான் மாறும்! ஜெயக்குமார் எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share