எல்லையை விரிவு செய்த பவன் கல்யாண்! தெலுங்கானா அரசியலில் ஜனசேனா என்ட்ரி!!
ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், தெலுங்கானா அரசியலில் களமிறங்கி உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன் கல்யாண், தற்போது தெலுங்கானா அரசியலிலும் தீவிரமாக களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹைதராபாத்தில் ஜனசேனா கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்திருப்பது, இரு மாநில அரசியலிலும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் பவன் கல்யாண் இறங்கியதற்கு முன்பாக நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அவரது அரசியல் முடிவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது ரசிகர் நிரஞ்சன், மரபணு நோயால் படுக்கையிலேயே வாழ்ந்து வந்த நிலையில், தனது வாழ்நாளில் ஒருமுறையாவது பவன் கல்யாணை சந்திக்க வேண்டும் என்று வீடியோ மூலம் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ரசிகரின் வீட்டிற்கே நேரில் சென்ற பவன் கல்யாண், அவரை சந்தித்து நீண்ட நேரம் பேசினார். படுக்கையில் இருந்தபடியே பவன் நடித்த திரைப்படங்களின் வசனங்களை ரசிகர் உணர்ச்சியுடன் பேசியது அவரை நெகிழச் செய்தது. உடனடியாக தனது கையில் இருந்த பணத்தை ரசிகரிடம் வழங்கியதுடன், அவருக்காக வீடு கட்டித் தருவதாகவும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜயை பார்த்து அசந்து போன பவன் கல்யாண்!! தவெக மாடலை காப்பி அடிக்கவும் திட்டம்!
இந்த சந்திப்பின் போது, பவன் கல்யாணை காண தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டனர். பிராந்திய உணர்வுகளைத் தாண்டி கிடைத்த வரவேற்பு அவருக்கு புதிய நம்பிக்கையை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தெலுங்கானாவில் ஜனசேனா கட்சியை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை அவர் வேகப்படுத்தியுள்ளார்.
அரசியல் ரீதியாகவும் இந்த நகர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் உள்ள ஜனசேனா, எதிர்காலத்தில் தெலுங்கானாவில் பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல்களை சந்திக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நகராட்சி வார்டு தேர்தல், தெலுங்கானாவில் பவன் கல்யாணின் செல்வாக்கை சோதிக்கும் முதல் முக்கிய அரசியல் களமாக பார்க்கப்படுகிறது.
அந்த தேர்தலில் ஜனசேனா கணிசமான வெற்றியை பெற்றால், ஆந்திரம் மற்றும் தெலுங்கானா என இரு மாநிலங்களிலும் பவன் கல்யாணின் அரசியல் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜயை பார்த்து அசந்து போன பவன் கல்யாண்!! தவெக மாடலை காப்பி அடிக்கவும் திட்டம்!