அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பும் ப.சிதம்பரம்!
சட்டவிரோத குடியேறிகள் என்ற காரணத்தைக் கூறி அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்களா என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக கடந்த மாதம் 20-ந் தேதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அன்றுமுதல் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்ஒருபகுதியாக சட்டவிரோத குடியேறிகளை கண்டுபிடித்து அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த 5-ந் தேதி இந்தியர்கள் 104 பேர் சட்டவிரோத குடியேறிகள் என்ற அடிப்படையில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அவர்களின் கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டு அனுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இரண்டாவது கட்டமாக மேலும் 119 இந்தியர்கள் இன்று இந்தியா அனுப்பப்பட உள்ளனர். இந்த சூழ்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் மத்திய அரசை நோக்கி சில கேள்விகளை எழுப்பி உள்ளர். அவரது பதிவு வருமாறு,
இதையும் படிங்க: மோடி எஃபெக்ட்: அமெரிக்காவின் ‘போர்போர்ன் விஸ்கி’ மீதான வரி 50 % குறைத்தது இந்தியா
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை இந்தியாவுக்கு அமெரிக்க அரசு திரும்ப அனுப்புகிறது. அமெரிக்க விமானம் 119 இந்தியர்களை இன்று கொண்டு வருகிறது. அந்த 119 இந்தியர்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்களா என்பதே கேள்வி. அவர்கள் கைகளில் விலங்கு போடப்பட்டதா? அவர்கள் கால்கள் கயிறால் பிணைக்கப்பட்டதா? இந்திய ராஜதந்திரத்திற்குப் பெரிய சவால். இந்திய ராஜதந்திரம் வெல்ல வேண்டும், இந்தியர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படவேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பம்.. என அந்த பதிவில் கேட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விவகாரம் முக்கிய பேசுபொருளாக எழுந்துள்ளது. பிரதமரை புகழும் ட்ரம்ப், இந்தியர்களை கண்ணியத்துடன் அனுப்ப தயங்குவது ஏன்? இதுபற்றி மோடி ட்ரம்பிடம் என்ன பேசினார் போன்ற கேள்விகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
இதையும் படிங்க: இப்படியும் ஒரு காதல்.. சிறையில் இருந்தபடி காதலிக்கு "ஜெட் விமானம்" பரிசளித்த காதலர்..