×
 
☰

"ஒரே ஓட்டு"..! அரசியலை உலுக்கிய சர்ச்சை..! பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!!

தவெக MLA வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சீனிவாச சேதுபதி சுமார் 83,365 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், பெரியகருப்பன் 83,364 வாக்குகளுடன் பின்தங்கினார்.

இந்த மிக நெருக்கமான போட்டி, தேர்தல் வரலாற்றில் அரிதான சம்பவமாகப் பேசப்பட்டது.பெரியகருப்பன் இந்த முடிவை ஏற்க மறுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். அவரது மனுவில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு உரிய ஒரு தபால் வாக்கு, அதே பெயர் கொண்ட வேறு திருப்பத்தூர் தொகுதிக்கு தவறுதலாக அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அந்த வாக்கை மீட்டு சரியான தொகுதியின் கணக்கில் சேர்க்க வேண்டும், தேவைப்பட்டால் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

உயர்நீதிமன்றம் இந்த மனுவை அவசரமாக விசாரித்தது. சிறப்பு அமர்வு ஒன்று கூட நடைபெற்றது. இறுதியில் நீதிமன்றம், சீனிவாச சேதுபதி சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவு தவெக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து சீனிவாச சேதுபதி உச்சநீதிமன்றத்தை நாடினார்.

இதையும் படிங்க: "ஓம் காளி... ஜெய் காளி... தவெக ஒரு ஓடுகாலி"..! உதயநிதியின் முழக்கம்.. வெளுத்துவிட்ட பாஜக..!

உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவை “அசாதாரணமானது” என்று விமர்சித்து, அதன் செயல்பாட்டிற்குத் தடை விதித்தது. மேலும் உயர்நீதிமன்ற விசாரணையையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதற்கிடையே பெரியகருப்பன், தேர்தல் முடிவை எதிர்த்து தனியாக தேர்தல் மனுவையும் தாக்கல் செய்தார். உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த தனது எழுத்து மனுவைத் திரும்பப் பெறும் கோரிக்கையை முன்வைத்தார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்றொரு நீதிபர் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்ற உத்தரவைக் கவனத்தில் கொண்டு, அந்த மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தது. 

 

இதையும் படிங்க: பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார் உதயநிதி! அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி தாக்கு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share