பெருந்துறையில் பலம் இழக்கும் திராவிட கட்சிகள்! அதிமுக கோட்டை பெரிய ஓட்டை! தவெகவுக்கு வாய்ப்பு!
பெருந்துறை தொகுதி அ.தி.மு.க., கோட்டை என வர்ணிக்கப்பட்டாலும், தி.மு.க., - அ.தி.மு.க., தொடர்ந்து பலம் இழப்பதால், இம்முறை த.வெ.க.,வுக்கு சாதகமாகும் நிலை ஏற்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெருந்துறை, நீண்ட காலமாக அ.தி.மு.க.,வின் பலமான கோட்டையாக கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், கட்சிகளுக்குள் உருவான அதிருப்தி மற்றும் ஓட்டு பிரிவுகள் காரணமாக, வரவிருக்கும் இடைத்தேர்தலில் த.வெ.க.,வுக்கு சாதகமான சூழல் உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
1957 முதல் இதுவரை நடைபெற்ற 16 சட்டசபை தேர்தல்களில், அ.தி.மு.க., 10 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், காங்கிரஸ் மற்றும் சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சிகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளன. கடந்த தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரான ஜெயகுமார் 9,693 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் அவர் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது இடைத்தேர்தல் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயகுமார் 70,302 ஓட்டுகள் பெற்றிருந்தார். தி.மு.க., சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் 60,609 ஓட்டுகளும், த.வெ.க., வேட்பாளர் வி.பி. அருணாசலம் 59,482 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இதனால் மூன்று கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியிருந்தது.
இதையும் படிங்க: ஆளுநரே வேந்தரா..? பதவி சுகத்துக்காக கொள்கை மாற்றமா?.. அமைச்சர் விஸ்வநாதனை விளாசிய பொன்முடி..!!
தற்போது அரசியல் சூழல் மாறியுள்ள நிலையில், ஜெயகுமார் த.வெ.க.,வில் இணைந்து செயல்படுவதால், அவரது சொந்த செல்வாக்கு ஓட்டுகள் த.வெ.க., பக்கம் திரள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க.,வில் நிலவும் அதிருப்தி மற்றும் ஓட்டு பிரிவு காரணமாக அந்த கட்சி பலவீனமடைந்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேலும் தி.மு.க., கூட்டணியில் இருந்த சில கட்சிகள் மற்றும் அதிருப்தி வாக்காளர்களின் ஆதரவும் த.வெ.க.,வுக்கு கிடைக்கலாம் என்ற கணிப்புகள் வெளியாகியுள்ளன. கடந்த தேர்தலில் த.வெ.க., தனியாகவே பெற்ற வாக்குகள் தற்போது அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், பெருந்துறை இடைத்தேர்தல் இந்த முறை மிகவும் பரபரப்பான அரசியல் களமாக மாறியுள்ளது. தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஓட்டு சிதறலால் த.வெ.க., புதிய சக்தியாக உருவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா..? அலட்சியம் காட்டாதீர்கள்..! அண்ணாமலை அட்டாக்..!!