சென்னை வருகிறார் பியூஸ் கோயல்!! எடப்பாடி வீட்டில் தயாராகும் விருந்து! தொகுதி பங்கீடு அச்சாரம்!
அதிமுக - பாஜக தொகுதிப்பங்கீடு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: 2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து இன்று (டிசம்பர் 23) முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தமிழக தேர்தல் பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வருகை தர உள்ளார்.
பியூஷ் கோயல் சென்னை வந்ததும், பாஜக நிர்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு, கூட்டணி விவகாரங்கள் மற்றும் புதிய கட்சிகளை கூட்டணிக்கு இழுப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, எடப்பாடி பழனிசாமி தனது சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் பியூஷ் கோயலுக்கு விருந்து அளித்து உபசரிக்க உள்ளார். மதியம் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மாலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பியூஷ் கோயல் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: டெல்லி பறக்கு நயினார் நாகேந்திரன்! அமித் ஷாவுடன் மீட்டிங்! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தீவிர ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலும், இணை பொறுப்பாளர்களாக அர்ஜூன் ராம் மெக்வால், முரளிதர் மொகல் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் பியூஷ் கோயல் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவர் என்பதால், இம்முறையும் தொகுதிப் பங்கீடு உட்பட கூட்டணி விவகாரங்களை வெற்றிகரமாக முடிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகா கூட்டணி என்னாச்சு? அழுத்தம் தரும் அமித்ஷா! அ.தி.மு.க. பொதுக்குழுவில் பழனிசாமி அதிரடி முடிவு?