பிரதமர் மோடி பங்கேற்கும் மதுரை கூட்டம் சென்னைக்கு மாற்றம்? பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை!
வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பிரம்மாண்ட NDA பொதுக்கூட்டம், திடீரென சென்னைக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், இடத்தேர்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சில சிக்கல்கள் காரணமாக, பொதுக்கூட்டத்தை மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றுவது குறித்து மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையை அடுத்த பாண்டிகோவில் அருகே உள்ள அம்மா திடலில் இந்தக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டு, அதற்கான அனுமதி கோரும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், பிரதமர் மோடி பங்கேற்கும் அதே மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அனைத்துக் கூட்டணித் தலைவர்களும் சங்கமிக்க உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னை அளவுக்கு மதுரையில் சாத்தியப்படுமா என்ற விவாதம் எழுந்துள்ளது. மேலும், மதுரையில் இடநெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பாதுகாப்புத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கூட்டத்தை வண்டலூர் அல்லது சென்னையின் புறநகர் பகுதிக்கு மாற்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜனவரி 21-ஆம் தேதி பியூஷ் கோயல் தமிழகம் வந்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய உள்ள நிலையில், 23-ஆம் தேதி நடைபெறும் கூட்டமே கூட்டணிக் கட்சிகளின் பலத்தை நிரூபிக்கும் மேடையாக அமையும். இந்த முக்கியமான நிகழ்வைத் தடையின்றி நடத்தவும், அதிகப்படியான தொண்டர்கள் கூடும்போது பாதுகாப்புச் சிக்கல்கள் வராமல் தவிர்க்கவும் சென்னைதான் சரியான இடமாக இருக்கும் எனப் பாஜக மேலிடம் கருதுவதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் இருந்து சென்னைக்குக் கூட்டம் மாற்றப்பட்டால், அது தென் மாவட்ட பாஜக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே சற்றே ஏமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "போதைப்பொருள் ஒழிப்பே லட்சியம்!" வைகோவின் சமத்துவ நடைபயணம் இன்று மதுரையில் நிறைவு!
இதையும் படிங்க: “போலீஸாரை திரும்பப் பெற முடியாது!” – திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!