பாமகவில் இருந்து அன்புமணி தற்காலிக சஸ்பெண்ட்?... சாட்டையை சுழற்ற முடிவெடுத்த ராமதாஸ்...!
வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு பிறகு, அன்புமணியை தற்காலிக நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாமகவில் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்குமான மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் புதிதாக எட்டு பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்த மருத்துவர் ராமதாஸ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி வானூர் அடுத்த பட்டனூர் பகுதியில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அறிக்கை ஒன்றை ராமதாசிடம் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்தது.
அந்த அறிக்கையில்...அன்புமணி தொடர்ந்து கட்சிக்கும், ராமதாசிற்கும் எதிராக செயல்பட்டு கட்சிக்கு களங்கத்தையும், பிளவையும் ஏற்படுத்தி வருகிறார் என்றும் ராமதாஸ் அமரும் இடத்திற்கு அருகில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது, தன்னிச்சையாக பொதுக்குழு கூட்டம் நடத்தியது, அவர் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் காலி நாற்காலி போட்டு ராமதாசை அவமானப்படுத்தியது, ராமதாசிடம் உரிய அனுமதி பெறாமல் நடை பயணம் நடத்தி வருவது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளை அன்புமணி மீது முன் வைத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ச்சீ... இப்படியெல்லாம் பொய் பேச வாய் கூசலையா ஸ்டாலின்? - திமுகவை பொளந்தெடுத்த அன்புமணி...!
அதன் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூறியுள்ள 16 குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நேற்று டாக்டர்.ராமதாஸ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கான கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அன்புமணி இதுவரை எந்த பதிலும் அளிக்காததால் இதன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை (01.09.2025) அன்று ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் கூடுகிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு பிறகு, அன்புமணியை தற்காலிக நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: வாயத் தொறந்தாலே பொய்.. லோக் ஆயுக்தா வாக்குறுதி என்ன ஆச்சு முதல்வரே? அன்புமணி சரமாரி கேள்வி..!