பா.ம.க.வில் புதிய புயல்! அன்புமணியுடன் இணைந்த ராமதாஸ் ஆதரவாளர்கள்! எதிர்ப்பை காட்டும் முக்கிய தலைவர்கள்!!
பா.ம.க., பிளவுபட்டிருந்தபோது, ராமதாஸ் நியமித்த கட்சி நிர்வாகிகள், தற்போது கட்சி ஒன்றிணைந்த நிலையில், அன்புமணி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
பா.ம.க.வில் அண்மையில் ஏற்பட்ட உள்கட்சி கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்த நிலையில், கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணிகளில் தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்பு நியமித்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு, கட்சி ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய அன்புமணி, தமிழக அரசியலில் மாற்றத்திற்கான சூழல் உருவாகி வருவதாகக் குறிப்பிட்டார். பா.ம.க.விடம் திறமையான நிர்வாகிகளும் தெளிவான செயல்திட்டங்களும் இருப்பதாகவும், டாக்டர் ராமதாஸின் கனவுகள் மற்றும் கொள்கைகளை இனி ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேர்தல் காலத்தில் வெவ்வேறு அணிகளில் செயல்பட்டவர்கள் இனி ஒரே அணியாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு கட்சி அமைப்பை பலப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், செயலர், பொருளாளர், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் அன்புமணி தெரிவித்தார். அனைவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்றும், உறுப்பினர் சேர்க்கை முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: பா.ம.க.வில் பதவி பங்கீடு தொடக்கம்... ராமதாஸ் அணிக்கு முக்கிய பொறுப்புகள்? அன்புமணி தரப்பு தனி கவனம்!
இந்நிலையில், சேலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அருள் தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி, பா.ம.க. தலைமையை கடுமையாக விமர்சித்தார். டாக்டர் ராமதாஸை நம்பி செயல்பட்ட தங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், அன்புமணி தலைமையை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், தாம் மீண்டும் பா.ம.க.வில் இணையப் போவதில்லை என்றும், புதிய அரசியல் கட்சி தொடங்குவதா அல்லது வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்து ஆடி 18-க்கு பிறகு அறிவிப்பதாகவும் கூறினார்.
ஒருபுறம் பா.ம.க. தலைமையினர் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் முன்னாள் நிர்வாகிகளின் அதிருப்தி வெளிப்படையாகத் தொடர்வது, கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மீது கவனத்தை திருப்பியுள்ளது. குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பா.ம.க. எவ்வாறு தனது அமைப்பை வலுப்படுத்துகிறது என்பதே அரசியல் வட்டாரங்களில் முக்கியமாக கவனிக்கப்படும் அம்சமாக உள்ளது.
இதையும் படிங்க: இப்படி நட்டாற்றில் விடலாமா? இது நியாயமா? பாமகவில் மீண்டும் புகைச்சல்! ராமதாஸ் - அன்புமணி -ஸ்ரீகாந்தி பனிப்போர்!