மீண்டும் ஏமாற்றும் திராவிட மாடல்.. மின் கட்டண உயர்வில் நாடகம்.. தோலுரித்த அன்புமணி!
அனைத்து வகை மின் இணைப்புகளுக்கும் மின்சாரக் கட்டண உயர்வு கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து வகை மின் இணைப்புகளுக்கும் மின்சாரக் கட்டண உயர்வு கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜூலை மாதம் முதல் மின் கட்டண உயர்வு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வு இருக்காது என்று மின் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிவித்தார். இதையடுத்து அன்புமணி ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும்போது, அதிலிருந்து வீட்டு இணைப்புகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வீடுகளைத் தவிர கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற மின் இணைப்புகள் அனைத்துக்கும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதை அனுமதிக்க முடியாது. தமிழகத்தின் வரலாற்றில் 3 ஆண்டுகளில் 4 முறை மொத்தம் சுமார் ரூ. 45 ஆயிரம் கோடிக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய மனித நேயமற்ற அரசு திராவிட மாடல் அரசுதான். வீடுகளுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது என்று அரசு அறிவித்திருப்பது மக்களின் மீதுள்ள கருணையால் அல்ல, மாறாக, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறதே என்ற அச்சத்தால்தான்.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, 2023-ம் ஆண்டில் வீடுகளுக்கான மின்கட்டண உயர்வை அரசே ஏற்கும் என்று அறிவித்த ஆட்சியாளர்கள், கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி விட்டு, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் முடிவடைந்த பிறகு, பின் தேதியிட்டு வீடுகளுக்கும் சேர்த்து மின் கட்டணத்தை உயர்த்தியவர்கள்தான் என்பதை தமிழ்நாடு மறக்கவில்லை. எனவே, வீடுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்படாது என்பது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகம்தான்.
கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு ஏற்கனவே 3 முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப் பட்டதால் அவற்றின் செலவு மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மூடப்பட்டு விட்டன. கடந்த காலங்களில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையே குறைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இரக்கமே இல்லாமல் மீண்டும் ஒரு முறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தத் துடிப்பது சரியல்ல.
இதையும் படிங்க: மின்வாரியத்தின் இழப்புக்கு இதுதான் காரணம்... பாயிண்ட் பாயிண்டா எடுத்து வச்ச ராமதாஸ்!!
எனவே, வணிகம் மற்றும் தொழில் துறையினரை பாதுகாக்கும் வகையில் வீடுகளுக்கு மட்டுமின்றி, கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற் சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகை மின் இணைப்புகளுக்கும் மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இலவச மின்சார சலுகைகள் தொடருமா? அமைச்சர் சிவசங்கர் சொல்வது என்ன? விவரம் இதோ!!