தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் என் மகன்.. அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்..!!
ஒட்டு கேட்கும் கருவி வைத்து தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் அன்புமணி தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்து உளவு பார்த்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில், தான் அமரும் நாற்காலிக்கு அருகே விலை உயர்ந்த ஒட்டுக் கேட்பு கருவி இருந்ததை கண்டுபிடித்ததாக ராமதாஸ் தெரிவித்தார். இந்த கருவி லண்டனில் இருந்து வாங்கப்பட்டதாகவும், இது யார் வைத்தார்கள்? என தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் இந்த குற்றச்சாட்டை ராமதாஸ் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த தனியார் துப்பறியும் குழு வீட்டில் ஆய்வு செய்து, கருவியை காவல்துறையிடம் ஒப்படைத்தது. பாமக தலைமைச் செயலாளர் அன்பழகன், கிளியனூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.
இதையும் படிங்க: ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!
பாமகவில் ராமதாஸ்-அன்புமணி இடையே தலைமைப் பதவி மற்றும் அதிகாரத்தை மையமாகக் கொண்டு நீண்டகால மோதல் நீடித்து வருகிறது. இந்த சம்பவம் கட்சிக்குள் மேலும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த உள்கட்சி மோதல் பாமகவின் அரசியல் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எனது தைலாபுரம் வீட்டில் உளவுக்கருவி (ஒட்டுக் கேட்கும் கருவி) வைத்தது அன்புமணிதான். உலகிலேயே தந்தையை உளவு பார்த்த மகன் அன்புமணி ராமதாஸ் தான். அன்புமணி ஒவ்வொருவரிடமும் ஒரு பொய்யைக் கூறி வருகிறார் என்றும், செயல் தலைவரான அன்புமணி அறிவித்துள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளுக்கு எதிரானது; சட்ட விரோதம் என்றும் கூறினார்.
மேலும் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும். நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சியை வேறும் யாரும் உரிமை கோர முடியாது பாமக நான் உருவாக்கிய கட்சி; அதனால் நான் தான் நிறுவனர், தலைவர் எல்லாம் என்றும் பூம்புகார் மகளிர் மாநாட்டில் 3 லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ராமதாஸ் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி.. கிளியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு..!!