×
 

முரண்டு பிடிக்கும் ராமதாஸ் - அன்புமணி!! முட்டி மோதி முட்டுக்கொடுக்கும் அதிமுக - பாஜக!

இரு பிளவாக பிரிந்து நிற்கும் பா.ம.க.,வின் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தனித்தனியாக பேச்சு நடத்தி வரும் தகவல் வெளியாகி இருக்கிறது.

வன்னியர் வாக்குகளை முழுமையாகத் தன் பக்கம் இழுக்க, பிளவுபட்டுள்ள பாமகவின் இரு அணிகளையும் (ராமதாஸ் தரப்பு & அன்புமணி தரப்பு) தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுகவும் பாஜகவும் தனித்தனியே ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்ற பாமக, தற்போது அப்பா-மகன் இடையேயான மோதல் காரணமாக இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. அன்புமணி தரப்பைத் தேர்தல் ஆணையம் கட்சியாகவே அங்கீகரித்துவிட்ட நிலையில், ராமதாஸ் தரப்பு டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு காத்திருக்கிறது. இரு தரப்பும் தனித்தனியே மாபெரும் மாநாடுகளையும், மக்கள் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றன.

இந்தப் பிளவைப் பயன்படுத்திக்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன் நெருக்கமான நண்பரும் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளருமான இளங்கோவனை வைத்து ராமதாஸ் தரப்புடன் பேச்சு நடத்தியுள்ளார். அதேநேரம், பாஜக தரப்பும் அன்புமணி அணியுடன் தொடர்பு கொண்டுள்ளது.

இதையும் படிங்க: ராமதாஸ் - அன்புமணி போட்டி போராட்டம்!! கலக்கத்தில் வன்னியர் சங்க நிர்வாகிகள்!

இரு தரப்பும் ஒரே நிபந்தனையை வைத்துள்ளனர்: “2021-ல் கிடைத்தது போலவே இம்முறையும் 23 சட்டமன்றத் தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும்” என்று கேட்டுள்ளனர். அதிகத் தொகுதிகளையும் ராஜ்யசபா சீட்டையும் கேட்பதால், அதிமுகவும் பாஜகவும் தற்காலிகமாக பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளன. இதற்கிடையில், திமுக தரப்பும் ராமதாஸைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருப்பதைச் சுட்டிக்காட்டி ராமதாஸ் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

விரைவில் தமிழகம் வரவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரு அணித் தலைவர்களையும் ஒரே மேஜையில் அமரவைத்து, சுமூகத் தீர்வு காண முயற்சி செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாமகவின் பிளவு 2026 தேர்தலில் யாருக்கு சாதகமாக மாறும் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.

இதையும் படிங்க: நான்தான் தலைவர்!! அன்புமணி கிடையாது!! தேர்தல் கமிஷன் நடவடிக்கையால் கொந்தளிக்கும் ராமதாஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share