ராமதாஸ் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது... ஜி.கே.மணிக்கு நேரடியாக சவால் விட்ட திலகபாமா...!
ராமதாஸ் பேசுவதை பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் இணைத்துக் கொண்டுள்ளோம் பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி முதல் தொடங்கி,வரும் நவம்பர் 1-ம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை 100- நாட்கள் மேற்கொண்டு வருகிறார். 26-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை தென் தமிழகத்தில் நடை பயணம் மேற்கொள்ளவுள்ள அன்புமணி, வருகிற 29-ம் தேதி திங்கட்கிழமை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனது பயணத்தை மேற்கொள்கிறார். இந்நிகழ்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலப் பொருளாளர் திலகபாமா கூறியதாவது:- சிவகாசியில் பாமகத் தலைவர் அன்புமணியின் நடைப்பயணத்தின் போது விருதுநகர் மாவட்டம் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை வலுப்படுத்த காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், கந்தக பூமியான சிவகாசியில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்கள் நலனையும் பாதுகாக்க வலியுறுத்தப்படும்.
அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க இருக்கும் தொழிலைப் பத்திரப்படுத்தி, விவசாயத்தை அதிகப்படுத்துவது நடை பயணத்தின் முக்கிய நோக்கமாகும். தலைவர் அன்புமணி தலைமையிலான நிர்வாகிகளுக்கு தேர்தல் ஆணையம் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் வரை நீடித்து ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதற்கு எதிர்மறையாக யாராவது பேசி வந்தால் ஜனநாயக ரீதியாக யாரும் ஒத்துக் கொள்ள முடியாது.
இதையும் படிங்க: “பை நிறைய பொய்” - அன்புமணியின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்ட ஆரம்பித்த ராமதாஸ் தரப்பு...!
தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு ஆதரவாக வழங்கியுள்ள ஒப்புதல் கடிதத்தை மக்கள் நம்பத் தொடங்கி விட்டனர். நடை பயணத்தில் எங்களுடன் உள்ளனர். இன்றைய தினம் எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மக்களை சந்தித்து வருவதைத் தான் பிரதான நோக்க மாகக் கொண்டுள்ளன என்பது அரசியலில் தெளிவாகிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மக்களை நேரில் சந்தித்துதான் ஆக வேண்டும். இதில் யாரும் யாரையும் போட்டியாக எடுத்துக் கொள்ள முடியாது. யார் மக்களை சந்தித்தாலும் தங்களுக்கு யார் வேண்டுமென்று மக்கள் தான் தீர்மானிப்பார்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸ் பேசி வருவதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் எங்களை இணைத்துக் கொண்டுள்ளோம். தமிழகத்தின் தென் பகுதியில் பாமக வலுவாயில்லை என்பதைத் தாண்டி வருகிற 29-ம் தேதி நடைபெறும் நடைப்பயணத்திலும் பாமக தலைவர் அன்புமணியை பார்க்க வரும் ஆர்வத்தோடு தென் பகுதியிலும் பாமகவுக்கு மக்கள் கூட்டம் கூடும்.
அன்புமணியை தலைவராக நீட்டித்த தேர்தல் ஆணையத்தின் ஆவணம் தவறானது என கூறும் ஜி.கே.மணி அதற்கான ஆதாரமாக ஆவணத்தை வெளியிட வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது, அந்த கட்டித்ததை நாங்கள் வெளியிட்டுள்ளோம். அதற்கு மேல் அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யட்டும்.
தேர்தல் ஆணைய ஒப்புதல் கடிதத்திற்கு பின்பாக பாமக நிர்வாகிகள் ரொம்பத் தெளிவாகயிருக்கும் நிலையில், முன்பு குழப்பத்திலிருந்தவர்கள் கூட இன்றைய தினம் அன்பு மணி பக்கம் திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். அன்புமணி தலைமையை ஏற்றுக் கொண்டு சலனமின்றி உள்ளனர். பாமக என்பது ஒன்றுதான். அப்பா - மகன் பிரச்சனை குறித்து பாமக நிர்வாகிகள் பேசுவதற்கு ஏதுமில்லை. எங்களைப் பொறுத்தவரை கட்சி நிர்வாகிகள் ஒன்றுதான். அனைவரும் கிளை நிர்வாகிகளாக பணியாற்றிக் கொண்டுள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: திமுகவா? பாஜகவா? தவெகா? - தைலாபுரத்தில் தீவிர ஆலோசனையில் ராமதாஸ்... மிஸ் ஆன ஜி.கே. மணி...!