“மேட்டூர் அணை திறந்தும் விவசாயிகளுக்கு பயன் இல்லை!” – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு குற்றச்சாட்டு
குறுவை மற்றும் சம்பா சாகுபடி தொடர்பான காலகட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது திறக்கப்படும் தண்ணீரால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பயன் கிடைக்காது என்றும் கூறினார்.
சென்னை: மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு முழுமையான பலன் கிடைக்காது என்றும், இதனால் விவசாயிகளின் முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் கதர் மற்றும் கைத்தறி துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற பின்னர், தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், நெசவாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார்.
கதர் ஆடைகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றும், வாழ்நாள் முழுவதும் கதர் ஆடையை அணிந்து வாழ்ந்தவர் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயத்திற்கு அரசு வழங்கும் முக்கியத்துவத்தைப் போலவே நெசவுத் தொழிலுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும், விவசாயமும் நெசவும் நாட்டின் இரு கண்கள் போன்றவை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரக்ஷாபந்தன் வாழ்த்து சொன்ன பிரேமலதா...! சட்டென சபாநாயகர் கொடுத்த ரியாக்ஷன்..! சட்டப்பேரவையில் கலகல..!
ஏற்கெனவே நெய்யப்பட்ட துணிகள் அதிகளவில் இருப்பில் உள்ள நிலையில், புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் பழைய இருப்புகள் தேங்கும் நிலை ஏற்படுவதாகவும் அவர் கூறினார். எனவே, நெசவாளர்களிடம் ஏற்கெனவே தயாராக உள்ள துணிகளையும் அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தூத்துக்குடியில் கப்பல் தளம் அமைக்கும் திட்டம் தொடர்பாகவும் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்தார். கப்பல் தளம் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் உப்பளம் தொழில் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம் என்றும், எனவே அந்தத் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, மேட்டூர் அணை திறப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மேட்டூர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார். குறுவை மற்றும் சம்பா சாகுபடி தொடர்பான காலகட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது திறக்கப்படும் தண்ணீரால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பயன் கிடைக்காது என்றும் கூறினார்.
இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை கருத்தில் கொண்டு, அவர்களின் முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார். மேட்டூர் அணை திறப்பு அரசியல் ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், அதன் பலன் விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு சென்றடையும் என்பதே முக்கிய கேள்வியாக இருப்பதாக அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: எம்எல்ஏக்களுக்கு கார்.. உதவியாளர்..! பயிர் கடன் தள்ளுபடி செஞ்சிருந்தா... பிரேமலதா ஆதங்கம்..!