"விஜய் யாரு கட்டுப்பாட்டுல இருக்காரு? திரிஷாகிட்ட கேளுங்க!" - புட்டு புட்டு வைத்த பி.டி.செல்வகுமார்!
விஜய் யாரது கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பது நடிகை திரிஷாவுக்குத்தான் தெரியும் என அவரது முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், தற்போதைய திமுக நிர்வாகியுமான பி.டி.செல்வகுமார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிரடியான புகார்களை முன்வைத்துள்ளார். விஜய் தற்போது ஒரு மாயை உலகில் வாழ்ந்து வருவதாகவும், அவரைச் சுற்றி இருப்பவர்கள் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாகவும் தூத்துக்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு ஆட்டுக்குட்டிகள் மற்றும் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், தற்போதைய திமுக நிர்வாகியுமான பி.டி.செல்வகுமார், பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சி விவகாரங்கள் குறித்துப் பல அதிரடித் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், "தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்குச் சற்றும் மரியாதை இல்லை. விஜய்யைச் சுற்றி ஒரு கும்பல் பணத்திற்காக மட்டுமே அமர்ந்துள்ளது; அங்கு வசூல் வேட்டைதான் நடக்கிறது. கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, பல ஆண்டுகளாக விஜய்க்காக உழைத்த பழைய நிர்வாகிகளை ஓரம் கட்டுகிறார்கள். இதனால் அதிருப்தியடைந்துள்ள சுமார் 20 மாவட்டச் செயலாளர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகைக்குப் பின் திமுக-வில் இணையும் விழா பிரம்மாண்டமாக நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "விஜய் ஒருத்தரால தான் முடியும்!" அதிமுக டூ தவெக.. மொத்தமா களமிறங்கும் புள்ளிகள்!
தொடர்ந்து விஜய்யின் அரசியல் அணுகுமுறை குறித்து விமர்சித்த அவர், "விஜய் தற்போது ஒரு மாயை உலகில் இருக்கிறார். மக்கள் நலத்திட்டங்களில் அவருக்கு அக்கறை இல்லை" என்றார். குறிப்பாக, "விஜய் தற்போது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்?" எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அதை நடிகை திரிஷாவிடம் கேட்டால் தான் தெரியும்" எனப் பதிலளித்தது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் மிக நெருக்கமான வட்டாரத்தில் இருந்த ஒருவரே இத்தகைய தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக-பாஜக வெற்றிக்கு உழைப்போம்; "தவெக கட்சியே கிடையாது!" – விஜய்யை வெளுத்து வாங்கிய சரத்குமார்!