×
 

முக்கிய துறைகளை குறி வைக்கும் பாஜக! இலாகா ஒதுக்குவதில் நீடிக்கும் இழுபறி! புதுவை அரசியலில் புயல்!

கடந்த அமைச்சரவையில் பாஜகவுக்கு அளித்த துறைகளை தற்போதும் வழங்க வேண்டும் என பாஜகவினர் கேட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்து ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யும் பணி இன்னும் முடிவடையாமல் இழுபறியில் உள்ளது. இந்த விவகாரம் கூட்டணிக்குள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 13-ம் தேதி முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது. பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். பின்னர் ஜூன் 17-ம் தேதி ராஜவேலு, சிவகொழுந்து (என்.ஆர்.காங்கிரஸ்) மற்றும் ராஜசேகர் (பாஜக) ஆகியோர் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டனர். ஆனால் இதுவரை எந்த அமைச்சருக்கும் துறைகள் ஒதுக்கப்படவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வும் நடைபெறவில்லை. பாஜக தரப்பில் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை கேட்டு வருகிறது. முன்பு அளிக்கப்பட்ட துறைகளையே தற்போதும் வழங்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் US தூதர் சந்திப்பு!

ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி முக்கிய துறைகளை பாஜகவுக்கு வழங்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. சபாநாயகர் பதவியையும் பாஜக கோரியுள்ள நிலையில், துணை சபாநாயகர் பதவியை மட்டும் தர முதலமைச்சர் தயாராக உள்ளார். இதற்கும் பாஜக சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நேற்று புதுச்சேரி வந்தார். கோரிமேட்டில் முதலமைச்சர் ரங்கசாமியின் இல்ல வளாகத்தில் உள்ள டென்னிஸ் கோர்ட்டில் இருவரும் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினர். மாநில பாஜக தலைவர் ராமலிங்கம் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது பாஜக தலைமையின் கருத்துக்களை ரங்கசாமியிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின்றன.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதலமைச்சர் ரங்கசாமியுடன் தொலைபேசியில் பேசியதாகவும் செய்திகள் பரவுகின்றன. இருப்பினும் இரு தரப்பும் இதை உறுதிப்படுத்தவில்லை. 

இந்த உயர்மட்ட பேச்சுகளுக்குப் பிறகு விரைவில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் புதுச்சேரியில் நீண்டு வரும் இலாகா இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி ஆட்சியின் நிலைத்தன்மைக்கு இந்த முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: கைரேகை முக்கியம்!! குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது! டெல்லி மாநாட்டில் அமித்ஷா உறுதி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share