×
 

ஆபத்தானவராக மாறிவிட்டார் ராகுல்காந்தி! நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்! மத்திய அமைச்சர் பகீர்!

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார்.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு நேர்காணலில் அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ராகுல் காந்தி பொறுப்பில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டிய ரிஜிஜூ, "எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு பாராளுமன்றத்தில் நாடகமாடுவது, காகிதங்களை வீசுவது, பதாகைகள் ஏந்துவது போன்ற செயல்கள் மோசமானவை" என்றார்.

இந்திய வரலாற்றில் இப்படியொரு எதிர்க்கட்சித் தலைவரை பார்த்ததில்லை என கூறிய அவர், ராகுலின் ஆதரவாளர்கள் கூட இதை தீவிரமாக எடுத்துக்கொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி யாரையாவது சந்தித்ததாக ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு வைப்பது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு துரோகம்! சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல்காந்தி!

மேலும், ராகுல் காந்தி உள்நாட்டு நக்சலைட்டுகள், வெளிநாட்டு எதிரிகளுடன் தொடர்பில் இருப்பதால் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்துள்ளார் என்று கடுமையாக சாடினார்.

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே அமளியில் ஈடுபடுவதாக கூறிய ரிஜிஜூ, சமாஜ்வாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளின் எம்பிக்களுடன் இணக்கமாக செயல்பட முடிகிறது என்றார். ஆனால் ராகுலின் அநாவசிய நடத்தையால் சிறிய எதிர்க்கட்சிகளின் எம்பிக்களும் தங்கள் தொகுதி பிரச்சினைகளை பேச முடியாமல் போகிறது என விமர்சித்தார்.

சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியது மோசமானது என கூறிய அவர், சபாநாயகர் பொறுமையோடு நடந்து கொண்டார் என்றார். ஒருவேளை சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகராக இருந்திருந்தால் அனைவரையும் சஸ்பெண்ட் செய்திருப்பார் என குறிப்பிட்டார். 

காங்கிரஸ் கட்சியில் ஒரு காலத்தில் அனுபவமிக்க தலைவர்கள் இருந்தனர், ஆனால் இப்போது ராகுலைப் போலவே கட்சி மாறிவிட்டது என சாடினார். தொடர்ச்சியாக மூன்று முறை தோல்வி அடைந்தும் அதே தலைவருடன் காங்கிரஸ் தொடர்வது ஆச்சரியம் என்றும், பாஜகவில் இப்படி இருக்காது என்றும் தெரிவித்தார்.

இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் இதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் சூழலில் இது மேலும் அமளியை ஏற்படுத்துமா என உற்று நோக்கப்படுகிறது.

இதையும் படிங்க: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்! மார்ச் 9ல் ஓட்டெடுப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share