சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?
பிரதமர் மோடி தனது கேரளம் பிரசாரத்தின்போது சபரிமலையில் நடந்த முறைகேடுகள் குறித்து எதுவும் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் விமர்சித்துள்ளார்.
கேரளாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சபரிமலை கோயில் தொடர்பான முறைகேடுகள் குறித்து எதுவும் பேசாததை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று பாலக்காடு மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சபரிமலை விவகாரத்தை தவிர்த்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். பட்டணம்திட்டாவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், “பிரதமர் மோடி சபரிமலை பற்றி பேச மறந்துவிட்டார். அய்யப்பன் கோயில் தொடர்பான பிரச்சினைகளை அவர் குறிப்பிடவில்லை. இது பா.ஜ.க.வும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும் (எல்.டி.எஃப்.) இணைந்து செயல்படுவதைக் காட்டுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “தேர்தல் நலன்களுக்கு சாதகமாக இருக்கும்போது மட்டுமே பிரதமர் மதப் பிரச்சினைகளை எழுப்புகிறார். வாக்குகள் கிடைக்கும் என்றால் மட்டுமே கோயில்களைப் பற்றி பேசுவார். இல்லையெனில் அவர் மௌனமாக இருந்துவிடுவார்” என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டி!! திரிணாமுல் காங்., - பாஜகவுக்கு எதிராக களம் இறங்கிய காங்.,!
கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்.) ஆட்சிக்கு வந்தால் சபரிமலை கோயில் தொடர்பான முறைகேடுகளுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல் உறுதியளித்தார். “பா.ஜ.க.வின் முழு ஆதரவு பெற்ற இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு எதிராக நாங்கள் போட்டியிடுகிறோம். தேசிய அளவில் எங்களுக்கு சவால் விடும் ஒரே சக்தி காங்கிரஸ் என்பதால், யு.டி.எஃப். இருப்பதை பா.ஜ.க. விரும்பவில்லை” என்றும் அவர் கூறினார்.
ராகுல் காந்தி மேலும் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மத்திய அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் நிலையில், கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைவர்கள் மீது அத்தகைய அழுத்தம் எதுவும் இல்லை. நான் 36 வழக்குகளை எதிர்கொண்டுள்ளேன். 55 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டுள்ளேன். ஆனால் கேரள முதலமைச்சர் அல்லது எல்.டி.எஃப். தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.
ராகுல் காந்தியின் இந்த விமர்சனம் கேரள அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை விவகாரம் தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் முக்கிய இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடியின் மௌனம் குறித்த ராகுலின் கேள்வி, பா.ஜ.க.வுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள நர்ஸ்!! ராகுல்காந்தி நெகிழ்ச்சி!