ராகுல்காந்திக்கு சொந்த கட்சிக்குள்ளேயே வலுக்கும் எதிர்ப்பு! பிரியங்கா கையில் பொறுப்பு தர காங். தலைவர்கள் திட்டம்!
காங்கிரஸ் கட்சிக்குள், ராகுலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் குரல்கள் அதிகரித்துள்ளன. அதே சமயம், அவரது சகோதரி பிரியங்காவுக்கு ஆதரவு பெருகி வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடில்லி: காங்கிரஸ் கட்சியில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் தலைமை மீது கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. அதே சமயம், அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவுக்கு ஆதரவு குரல்கள் வலுவடைந்து வருகின்றன. இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான 'இண்டி' கூட்டணியில் உள்ள சில முக்கிய கட்சித் தலைவர்கள் ராகுலின் தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, பீஹார் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்தார்.
ஆனால், ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அவர் தொகுதி பக்கமே வரவில்லை என்று போஸ்டர்கள் அடித்து தேடும் அளவுக்கு அவரது செயல்பாடு இருந்தது. இதனால், பீஹார் தேர்தலில் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதற்கு ராகுலின் அலட்சியமே காரணம் என்று கூட்டணி தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) குறித்து ராகுல் எழுப்பிய புகார்களும், முந்தைய தேர்தல் முடிவுகள் பற்றி தேர்தல் ஆணையத்தை விமர்சித்த குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்று தெரியவந்தது.
இதையும் படிங்க: ராகுல்காந்தி - பிரியங்கா இடையே சண்டை!! பற்ற வைக்கும் பாஜக! புது குண்டை போடும் மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு!
மஹாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்களில் ராகுலின் வியூகம் பலனளிக்கவில்லை. இதனால், மும்பை மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸை கழற்றிவிட உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி முடிவு செய்துள்ளது.
இதனிடையே, ஒடிசா காங்கிரஸ் தலைவர் முகமது மொஹிம், "கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன் கார்கேயை நீக்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக பிரியங்கா காந்தியை தலைமைப் பதவியில் அமர்த்த வேண்டும்" என்று கூறினார். இது கட்சிக்குள் பெரும் புயலை ஏற்படுத்தியது. உடனடியாக முகமது மொஹிம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
சமீபத்தில், "வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரைப் பாதுகாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பிரியங்கா காந்தி பேசினார்.
இதற்கு உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத், "பிரியங்கா துணிச்சலுடன் கருத்து தெரிவித்துள்ளார். அவரை இந்தியாவின் பிரதமராக்க வேண்டும். அவர் தன் பாட்டி இந்திரா காந்தியைப் போல செயல்படுவார்" என்று புகழ்ந்தார். முன்னதாக, பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பிரியங்காவின் பேச்சுக்கு சில காங்கிரஸ் எம்பிக்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர்.
இந்தச் சம்பவங்கள் ராகுல் காந்தியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளன. பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முடியும் முன்பே அவர் வீட்டில் சண்டையிட்டுவிட்டு ஜெர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் பரவின. வங்கதேச பிரச்னை குறித்து பிரியங்கா பேசியது கட்சிக்குள் ஆதரவு பெற்ற நிலையில், ராகுலின் ஜெர்மனி பேச்சு பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.
ராகுல் ஜெர்மனியில், "இந்தியாவின் ஜனநாயகம் உலக சொத்து. அதன் மீதான தாக்குதல் உலக ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்" என்று மத்திய அரசை விமர்சித்தார். ஆனால், இது பெரிதாக எடுபடவில்லை.
பாஜக செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா, "ராகுல் விரக்தியில் உள்ளார். சொந்த கட்சியினரே அவரை ஒதுக்குகின்றனர். சசி தரூர், இம்ரான் மசூத் போன்றோர் ராகுலை நம்பவில்லை. பிரியங்காவை தலைவராக்க விரும்புகின்றனர். ராகுலின் மாமியார் ராபர்ட் வத்ராவும் இதை ஏற்கிறார். குடும்ப உறுப்பினர்களே அவரை நம்பவில்லை" என்று விமர்சித்தார்.
'இண்டி' கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்பி ஜான் பிரிட்டாஸ், ராகுலின் ஜெர்மனி பயணத்தை விமர்சித்தார். "பாராளுமன்ற கூட்டத்தொடர்களை பொருட்படுத்தாமல் ராகுல் வெளிநாடு செல்கிறார். எதிர்க்கட்சிகளை வழிநடத்துவார் என்று எதிர்பார்த்தோம். இனி இந்தக் காலங்களில் பயணம் திட்டமிட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம். காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதை அறிவுறுத்த வேண்டும்" என்று கூறினார்.
இந்த உட்கட்சி மோதல் காங்கிரஸின் எதிர்காலத்தை பாதிக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: உங்கபிள்ளை பண்ணுறது சரியா?! ராகுல்காந்தி பற்றி சோனியாவிடம் புகார்! எக்ஸ் எம்.எல்.ஏ சஸ்பெண்ட்!