தமிழகத்தில் பிரசாரம் செய்ய ராகுல்காந்தி தயக்கம்!! திமுக, காங் கூட்டணியில் சர்ச்சை! பின்னணியில் விஜய்?!
தான் விரும்பிய கூட்டணி அமையாததால், தமிழகத்தில் பிரசாரம் செய்ய ராகுல் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்ள விஜய் ஆதரவு நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் உள்ளிட்டோரும் இதே விருப்பத்தை வெளிப்படுத்தினர். தவெகவுடன் இணைந்தால் சிறுபான்மை ஓட்டுகள் பிரிந்து தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், காங்கிரஸுக்கு தனி அடையாளம் கிடைக்கும் என்றும் அவர்கள் கருதினர்.
ஆனால் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் தி.மு.க. கூட்டணியை வலியுறுத்தினர். ராகுலின் முயற்சியை முறியடித்து, தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டனர். காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? யாரோடு கூட்டணி வைப்பது? டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை!!
இந்த சூழலில், தான் விரும்பிய கூட்டணி அமையாததால் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் செய்ய தயக்கம் காட்டுவதாக கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தை விட கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்பு அதிகம் இருப்பதால், அங்கு பரப்புரை செய்வதற்கே ராகுல் முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளார் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் மார்ச் 5 அல்லது 9-ம் தேதி கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் மாநாடு நடத்த தமிழக காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. ராகுல் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் ராகுல் பங்கேற்க விரும்பாததால் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைமை பங்கேற்கும் பொதுக்கூட்டம், மாநாடுகளில் ராகுல் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது.
ராகுல் அதிருப்தியில் இருப்பதற்கு ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள், உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாதது காரணம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் மீதும் ராகுல் அதிருப்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமையும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், அங்கு பிரசாரம் செய்வதற்கே ராகுல் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், தமிழகத்தை இரண்டாம் இடத்தில் வைத்துள்ளதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொகுதி பங்கீடு!! திமுக கொடுத்த லாஸ்ட் ஆப்சன்!! காங்கிரசுக்கான தொகுதிகள் எது?! லிஸ்ட் ரெடி?!