×
 

கல்வி முறையை சீரழித்த பிரதமர் மோடி..!! விலை கொடுக்கிறது இந்திய இளம் தலைமுறை..!! ராகுல் காந்தி சாடல்..!!

பிரதமர் மோடி கல்வி முறையை சீரழித்ததற்கு இந்திய இளம் தலைமுறை விலை கொடுக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதித் தேர்வான நீட் யூஜி 2026 மே 3-ம் தேதி நடைபெற்றது. சுமார் 22.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்ததால், மே 12-ம் தேதி தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இந்த முடிவை அறிவித்த நிலையில், சிபிஐ விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது. மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிச்சயமற்ற சூழல் மாணவர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் மவுகஞ்ச் மாவட்டம் மகானியா கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி அகான்ஷா சதுர்வேதி, நாக்பூரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 20-ம் தேதி நாக்பூரில் உள்ள பயிற்சி மைய விடுதியில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்கப்பட்டது. அவரது தந்தை கிருஷ்ணா குமார் சதுர்வேதி ஒரு சிறு விவசாயி. மகள் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்க, கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். நாக்பூரிலேயே சமையல்காரர் வேலைக்கு அமர்ந்து, மகளின் படிப்பு செலவுக்கு உதவினார். அகான்ஷா முதல் முயற்சியிலேயே 650க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

தேர்வுக்குப் பின் வீட்டுக்கு வந்த அகான்ஷா மகிழ்ச்சியாக இருந்த நிலையில், வினாத்தாள் கசிவு செய்தியும் தேர்வு ரத்து அறிவிப்பும் அவரைப் பெரிதும் பாதித்தன. உணவு உட்கொள்ளாமல் தனிமைப்படுத்திக் கொண்ட அவர், தந்தைக்கு எழுதிய தற்கொலை கடிதத்தில், “அம்மா அப்பா, நீங்கள் என்னை டாக்டர் ஆக்க நம்பினீர்கள். ஆனால் மறுதேர்வு எழுத எனக்கு தைரியம் இல்லை. முதல் முறை நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று நினைத்தேன், இப்போது உத்தரவாதம் இல்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது உடல் மவுகஞ்சில் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “அகான்ஷா டாக்டராகி நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் சேவை செய்ய விரும்பினாள். ஒரு தந்தை தன் மகளின் கனவுக்காக அனைத்து கடமைகளையும் செய்தார். ஆனால் வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, நிச்சயமற்ற நிலை – இவை அவரை நம்மிடமிருந்து பிரித்தன. இது தற்கொலை அல்ல, பிரதமர் மோடி தலைமையிலான ஊழல் மற்றும் சிதைந்த கல்வி அமைப்பின் வெளிப்பாடு” எனக் குறிப்பிட்டார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்னும் பதவியில் இருப்பதையும், அதே கமிட்டிகள், இடமாற்றங்கள், விசாரணைகள் தொடர்வதையும் சுட்டிக்காட்டிய ராகுல், “கடந்த 12 ஆண்டுகளாக கல்வி முறையை சீரழித்ததற்கு இளம் தலைமுறையினர் விலை கொடுக்கின்றனர். அதிகாரம் நிலையானது அல்ல” என எச்சரித்தார். இந்தச் சம்பவம் நீட் தேர்வு அமைப்பின் பலவீனங்களையும், மாணவர்களின் மனநலப் பாதுகாப்பு குறித்த கவலையையும் மீண்டும் எழுப்பியுள்ளது. பல மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. 
 

இதையும் படிங்க: "பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது?" - அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆ.ராசா கேள்வி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share