தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!
பொன்னேரி, சோளிங்கர், துறையூரில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 18) தமிழகம் வருகிறார். ஒரே நாளில் மூன்று முக்கியத் தொகுதிகளில் அவர் மேற்கொள்ள உள்ள இந்தப் பரப்புரை, ‘இந்தியா’ கூட்டணித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை காலை தமிழகம் வரும் ராகுல் காந்தி, அன்றைய தினம் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தனது பரப்புரையைத் தொடங்குகிறார். முதலில் திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சோளிங்கர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார். அன்றைய தினம் மாலையில் திருச்சி மாவட்டத்திற்குச் செல்லும் ராகுல் காந்தி, அங்குள்ள துறையூர் தொகுதியில் நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். திருச்சி மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான துறையூரில் ராகுலின் வருகை, அப்பகுதியில் உள்ள கிராமப்புற வாக்குகளைப் பெரும் அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் பரப்புரையின் மூலம் கட்சியின் வேட்பாளர்களுக்கு நேரடி ஆதரவைத் திரட்டுகிறார். மத்தியில் பாஜக ஆட்சி மாற்றத்தின் அவசியம் மற்றும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து அவர் இந்தக் கூட்டங்களில் விரிவாகப் பேசுவார் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!
ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூர் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் இணைந்து பிரம்மாண்டமான மேடை மற்றும் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
கடந்த முறை தமிழகம் வந்தபோது மக்களுடன் எளிமையாகப் பழகிப் பலரது கவனத்தை ஈர்த்த ராகுல் காந்தி, இந்த முறையும் அத்தகைய நெகிழ்ச்சியான சந்திப்புகளில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
இதையும் படிங்க: நாளை மாலை தவெக-வின் முழு வாக்குறுதிகள் பட்டியல்! சென்னை நுங்கம்பாக்கத்தில் விஜய் வெளியிடுகிறார்!