#BREAKING விடிந்ததுமே திமுக தலையில் இறங்கியது பேரிடி... முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை...!
கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ. வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆட்சியில் நடந்த லஞ்ச புகார்களை தோண்டி எடுக்க துறை சார்ந்த அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக அமைச்சர்களிடம் பேசிய விஜய், கடந்த அரசின் ஊழல் மற்றும் லஞ்ச வெறியாட்டத்தால் தான் மக்கள் நமக்கு வாக்களித்துள்ளனர். அதனால் நமது ஆட்சியில் அதுபோன்ற தவறுகள் நடக்கக்கூடாது என்றும், கடந்த ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள், ஊழல் புகார்கள் குறித்து விரிவான தகவல்களை சேகரியுங்கள் என உத்தரவிட்டிருந்ததாக கூறப்பட்டது.
அதில் மின்சாரத்துறையும், பொதுப்பணிதுறையும் அதிக கவனம் செலுத்தப்பட்டன. அதற்காகவே லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அருண் ஐபிஎஸ் பதவியேற்ற பிறகு, ஏற்கனவே நிலுவையில் இருந்த மற்றும் புதிய ஊழல் புகார்கள் மீதான விசாரணைகள் வேகம் எடுத்து வந்தன. அந்த வகையில் இன்று திமுக ஆட்சி காலத்தில் 2021 -ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு வீட்டில் இன்று காலையிலேயே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர், திமுக எம்எல்ஏக்களின் சட்டசபை கொறடாவாகவும் இருந்து வருகிறார். திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவருமான எ.வ.வேலுவின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் திருவண்ணாமலை வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
மேலும் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எ.வ.வேலு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது பணி நியமனம் செய்வதில் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் எஃப்ஐஆர் போட்டுவிட்டு இது போன்ற சோதனைகளில் ஈடுபடுவார்கள். ஆனால் எ.வ.வேலு வீட்டில் எதற்காக சோதனை நடைபெறுகிறது, எந்த வழக்கு, யார் புகார்தாரர் போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. எ.வ.வேலு சாலை பணிகள், கட்டடம் கட்டும் பணிகளுக்கான அமைச்சராக இருந்ததால் அது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. அவரது வீட்டிற்குள் எத்தனை அதிகாரிகள் சென்றுள்ளனர் என்பது குறித்து தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.