×
 

அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் ரஜினி குடும்பத்திற்கு தொடர்பா..?? வெளியான முக்கிய தகவல்..!!

அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் கணவரும், தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசியல் களத்தில் சமீப நாட்களாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள முக்கிய நிகழ்வாக, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) மக்கள் இயக்கம் உருவெடுத்துள்ளது. பாஜகவிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்த அண்ணாமலை, அதனைத் தொடர்ந்து இந்த புதிய மக்கள் இயக்கத்தை அறிமுகப்படுத்தினார். அரசியல் மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதாக கூறப்படும் இந்த இயக்கத்தில் இதுவரை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு இந்த புதிய அமைப்புக்கு கிடைக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கத் திட்டமிட்டிருந்தபோது, அண்ணாமலை அவருடன் இணைந்து செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பின்னர் தேசிய பாஜக அமைப்பின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பி.எல். சந்தோஷின் அழைப்பை ஏற்று அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் கணவரும், முன்னணி தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளன. அப்பெக்ஸ் லேபரட்டரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள விசாகன், அண்ணாமலையின் பார்வை மற்றும் செயல்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு இந்த இயக்கத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

மேலும், அண்ணாமலை மற்றும் விசாகன் இடையே அண்மையில் நீண்ட நேர ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாற்றப்படும் இந்த அமைப்பில் விசாகனுக்கு முக்கிய நிர்வாகப் பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பொதுச்செயலாளர் நிலை பொறுப்பு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்தின் மருமகன் இந்த இயக்கத்துடன் இணைவது, அண்ணாமலையின் புதிய அரசியல் முயற்சிகளுக்கு நடிகர் ரஜினிகாந்தின் தார்மீக அல்லது மறைமுக ஆதரவு இருக்கிறதா என்ற விவாதத்தையும் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. அதேசமயம், தொழில்முனைவோர் மற்றும் கார்ப்பரேட் துறையைச் சேர்ந்த இளைஞர்களை ஈர்க்கும் வகையில் விசாகனின் பங்கு முக்கியத்துவம் பெறும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

இதையும் படிங்க: தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share