×
 

அடம்பிடிக்கும் ஆட்சியாளர்கள் இல்லை நாங்கள்! புதிய தலைமைச் செயலகம்! அமைச்சர் ராஜ்மோகன் பதில்!

கடற்கரையில் பேனா சிலையை வைத்தே தீருவோம் என பிடிவாதம் பிடித்த ஆட்சியாளர்கள் போல் தாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக பல்வேறு தரப்புகளில் கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், அனைவரின் கருத்துகளையும் கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கடற்கரையில் பேனா சிலையை வைத்தே தீருவோம் என பிடிவாதம் பிடித்த ஆட்சியாளர்கள் போல் தாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தவெக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உறுதியானதாகவும், ஜனநாயக அடிப்படையில் செயல்படுவதாகவும் தெரிவித்தார். கூட்டணிக்குள் இருந்தாலும் அரசின் முடிவுகள் குறித்து விமர்சனம் செய்வது அவர்களின் உரிமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீனவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் கருத்துகளை கேட்க வேண்டியது அவசியம் எனவும் அமைச்சர் கூறினார். அவர்களின் கருத்துகளைப் பெற்ற பிறகு முடிவை மறுபரிசீலனை செய்யும் உரிமை முதல்வருக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. விரைவில் பிரியாணிக்கு நடவடிக்கை.. அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..!!

புதிய தலைமைச் செயலகத்துக்கான திட்டத்துக்கு தமிழக அரசு ஏற்கனவே கொள்கை அளவில் ஒப்புதல் அளித்து, திட்டமிடல் பணிகளுக்காக குழுக்களையும் அமைத்துள்ளது. அதே நேரத்தில், பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மீனவர் குடியிருப்புகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என சில மீனவர் அமைப்புகளும் இடதுசாரி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த சூழலில், அரசின் முடிவுகள் பேச்சுவார்த்தை மற்றும் கருத்து கேட்பதன் அடிப்படையில் இருக்கும் என ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதனால் புதிய தலைமைச் செயலக திட்டம் தொடர்பாக அடுத்தகட்ட ஆலோசனைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இதனிடையே, GEM Granites நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி தொடர்பான பாலியல் வன்கொடுமை வழக்கையும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் மிகவும் கொடூரமானது என தெரிவித்த அவர், இந்த வழக்கு தொடர்பாக இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பினார். வீரமணி மீதான வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது; மேலும் சில பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலகம், மீனவர் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் கூட்டணி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அடுத்தகட்டமாக மேற்கொள்ளும் ஆலோசனைகள் கவனம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டவர் அஜித்குமார்..!! அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share