அன்புமணியை ஆரத்தழுவி கண்ணீர் வடித்த மறுகணமே... ராமதாஸ் எடுத்த அதிமுக்கிய முடிவு...!
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு: பாமக மற்றும் வன்னியர் சங்க பொறுப்புகளை ஒப்படைக்க முடிவு செய்ததாக தகவல்
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று தைலாபுரம் தோட்டத்தில் தனது தந்தையும் பாமக நிறுவுநருமான டாக்டர் ராமதாஸை சந்தித்தார். சுமார் 15 முதல் 18 மாத இடைவெளிக்குப் பிறகு இருவரும் நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சந்திப்பின்போது, அன்புமணி ராமதாஸை டாக்டர் ராமதாஸ் ஆரத்தழுவி வரவேற்றதாகவும், உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய அன்புமணி ராமதாஸின் செயல்பாடுகள் குறித்து டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சமூக நீதி கணக்கெடுப்பு தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டதையும், விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து பல்வேறு விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தியதையும் அவர் பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "வாயா என் தங்கமே"..! கட்டியணைத்து கண்ணீர் சிந்திய ராமதாஸ்... நல்லதே நடக்கும்.. நம்பிக்கை தெரிவித்த அன்புமணி..!!
மேலும், தனது விருப்பப்படி அன்புமணி ராமதாஸ் கிராமம் தோறும் சென்று மக்களை நேரில் சந்தித்து வருவதை டாக்டர் ராமதாஸ் ஊக்குவித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றுள்ள அன்புமணி ராமதாஸ், அடுத்ததாக கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் போது, “நீ செய்ய வேண்டும் என்று நான் விரும்பிய பல செயல்களை தற்போது செய்து கொண்டிருக்கிறாய்” என்ற வகையில் டாக்டர் ராமதாஸ் தனது மகனிடம் பாராட்டுத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது உடல்நலத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் பொறுப்புகளை அன்புமணி ராமதாஸ் கவனித்துக் கொள்ளும் வகையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. “கட்சியையும், அமைப்புகளையும் நீ கவனித்துக் கொள்” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாமகவுடன் இணைந்து செயல்பட்டு வரும் பசுமைத் தாயகம், சமூக ஊடக பேரவை, சமூக நீதி வழக்கறிஞர் சங்கம், வன்னியர் சங்கம் உள்ளிட்ட மொத்தம் 34 துணை அமைப்புகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு, பாமக மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் எதிர்கால நிர்வாகம் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒருவழியாக சேர்ந்த குடும்பம்..! "ராமதாசை சந்தித்த அன்புமணி... தந்தையின் திருமண நாள் கொண்டாட்டம்..!!