×
 

“அரசியல் பேசாதீங்க!” தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் போட்ட கண்டிஷன்... வைரலாகும் அறிவிப்பு

குறிப்பாக, அவரை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அரசியல் தொடர்பான ஆலோசனைகள் அல்லது விவாதங்களை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தின் நுழைவு வாயில் முன்பு, “தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்” என பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு தற்போது கவனம் பெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸின் இல்லம் அமைந்துள்ளது. இங்கு அவரை சந்திப்பதற்காக பாமக நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் அவ்வப்போது வந்து செல்கின்றனர்.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தனது 88-வது பிறந்தநாள் விழாவில் ராமதாஸ், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். “இன்று முதல் அரசியல் துறவறம் பூணுகிறேன்” என்று தெரிவித்த அவர், இனிமேல் அரசியல் பேசப்போவதில்லை என்றும், அரசியலுக்கு வழிகாட்டப்போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: செப்.1ம் தேதி முதல் மீண்டும் களத்திற்கு வரும் ராமதாஸ்... நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிறப்பித்த அன்புக்கட்டளை...!

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தைலாபுரம் இல்லத்திற்கு அவரை சந்திக்க வருபவர்கள் அரசியல் தொடர்பான விஷயங்களை பேச முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால், ராமதாஸ் மேற்கொண்டுள்ள அரசியல் துறவற முடிவை நினைவூட்டும் வகையில் தற்போது இல்லத்தின் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பு பலகையில், ராமதாஸை தினசரி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அவர் அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால், அவரை சந்திக்க வரும் பார்வையாளர்கள் தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ராமதாஸ் தனது அரசியல் விலகல் முடிவில் தொடர்ந்து இருப்பதை அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அவரை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அரசியல் தொடர்பான ஆலோசனைகள் அல்லது விவாதங்களை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசியலில் நீண்ட காலமாக முக்கிய பங்காற்றிய ராமதாஸ், தற்போது அரசியல் விவாதங்களுக்கு இடமில்லை என தனது இல்லத்திலேயே அறிவித்திருப்பது பாமக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: ராமதாஸ் குடும்பத்தில் மீண்டும் புயல்! அன்புமணிக்கு எதிராக புதிய அமைப்புடன் களமிறங்கும் ஸ்ரீகாந்தி?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share