"அப்பன் வீட்டு பணமல்ல": பொங்கல் பரிசு விவகாரத்தில் உதயநிதியை சாடிய ஆர்.பி.உதயகுமார்!
தமிழகத்தின் கடன் சுமைக்கு அமெரிக்கா காரணம் என நிதியமைச்சர் கூறுவது வேடிக்கையானது; பொங்கல் பரிசு என்பது மக்களின் வரிப் பணமே தவிர திமுகவின் சொந்தப் பணம் அல்ல என ஆர்.பி. உதயகுமார் சாடியுள்ளார்.
தமிழகத்தின் வரலாறு காணாத கடன் சுமைக்கு மத்திய அரசும், அமெரிக்காவின் வரி விதிப்பும்தான் காரணம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு ‘விஞ்ஞான’ பதிலைக் கூறி மக்களை ஏமாற்றுகிறார் எனச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் பொங்கல் பரிசு விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அனல் பறக்கும் கருத்துக்களை முன்வைத்தார். குறிப்பாக, பொங்கல் பரிசுத் தொகையை திமுகவினர் தங்களது சொந்தப் பணத்தைப் போல விநியோகிப்பதைக் கண்டித்த அவர், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பழைய பேச்சை வைத்தே அவருக்குப் பதிலடி கொடுத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசிய ஆர்.பி. உதயகுமார், "தமிழகத்தின் கடன் சுமையைச் சீரமைக்கக் குழு அமைப்போம் என்று கூறி ஆட்சியைப் பிடித்த ஸ்டாலின், இன்று எதற்கெடுத்தாலும் பிறர் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார். தங்கம் தென்னரசு டெல்லி சென்றுவிட்டு வந்து, தமிழகக் கடன் சுமைக்கு அமெரிக்காவின் வரி விதிப்புதான் காரணம் எனப் புதிய விஞ்ஞானப் புதிரைப் போடுகிறார். சிறு, குறு தொழில்கள் முடங்கியதற்கு ஜிஎஸ்டி காரணம் என நான்கு ஆண்டுகள் கழித்துக் கூறுவது, இந்த அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது" எனத் தெரிவித்தார். திமுக அரசு ஒரு ‘காலாவதி அரசு’ என வர்ணித்த அவர், தங்களின் இயலாமையை மறைக்கச் சீனா, ஜப்பான் என உலக நாடுகளைத் துணைக்கு அழைப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: “கொண்டாட்டம் ஆரம்பம்!” இன்று 3,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு! தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
பொங்கல் பரிசு விநியோகம் குறித்துப் பேசிய அவர், "எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது 5,000 ரூபாய் கேட்ட ஸ்டாலின், இன்று 3,000 ரூபாய் அறிவிப்பதன் மர்மம் என்ன?. ரேஷன் கடைகளில் திமுக கொடியைக் கட்டிக்கொண்டு, வட்டச் செயலாளர்கள் வந்த பிறகுதான் பரிசு கொடுக்க வேண்டும் என மக்களைக் காத்திருக்க வைப்பது அராஜகத்தின் உச்சம். இது ஒன்றும் திமுகவின் கட்சி நிதி அல்ல; உதயநிதி ஸ்டாலின் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்றால், இது உங்கள் அப்பன் வீட்டுப் பணமல்ல, மக்களின் வரிப் பணம்" என ஆவேசமாகத் தெரிவித்தார். தமிழகத்தை மீண்டும் முதன்மை மாநிலமாக்க, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மகுடம் சூட்டுவார்கள் என்று கூறிப் பேட்டியை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: “3000 ரூபாய் பொங்கல் பரிசு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது!” - மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!