×
 

தவெக-வின் நெக்ஸ்ட் மூவ் என்ன? செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்டில் நடத்தப்படும் என தவெக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் இன்று வெளியாகும். விஜய்யை, தமிழக மக்கள் தமிழ்நாட்டின் மாற்று சக்தியாகவும், நம்பிக்கையாகவும் பார்க்கின்றனர். விஜய்யின் எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதனிடையே வீட்டிற்கு ஒருவரை தவெகவில் சேர்க்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தெருவிலும் 2 பேர் தவெக நிர்வாகியாக இருக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

மேலும் 120 மாவட்டங்கள், 12,500 கிராமங்களில் தவெகவின் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விஜய்யின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு முன் மாநில மாநாட்டை நடத்த தவெக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, 2026 சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய். தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதற்கு தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. தவெகவில் மீதமுள்ள மூன்று கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தை ஜூலை மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஜூலை இரண்டாம் வாரத்தில் இருந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகளை நடத்த வேண்டும்.

இதையும் படிங்க: அஜித் விவகாரத்தில் விஜய் எடுத்த அதிரடி முடிவு... தமிழக அரசுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்...!

இதில், சுமார் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மாதம் முதல் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டை நடத்த வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்டில் நடத்தப்படும். செப்டம்பர் முதல் டிசம்பர் வரை விஜய் சுற்றுப்பயணம். சட்டசபை தேர்தலில் தமிழக முதலமைச்சராக தலைவர் விஜயை வெற்றியடையச் செய்யவேண்டும். பரந்தூர் விமான நிலைய அமைக்கும் பணியை பொதுமக்கள் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும். கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மத்திய அரசு கேட்டுப்பெற வேண்டும். தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். பாஜக அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பை ஏற்க முடியாது:

தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும். திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும். திருச்சியில் மணற்கொள்ளையை தடுக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம். நெய்வேலி சுரங்கத்துக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு உரிய இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். திண்டுக்கல்லில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு. இருமொழிகொள்கையை உறுதியாக பின்பற்றுகிறோம். ஆங்கிலம் பேசுவது அவமானம் என சொல்லும் அமித்ஷாவின் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம். தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கனிமவளக் கொள்ளைகளை தடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தவெக கொள்கை தலைவராக அம்பேத்கர் இருந்திருக்க மாட்டார்.. ஓபனாக அடித்த திருமாவளவன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share