×
 

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கமாட்டோம் - சபாநாயகர் செல்வம் திட்டவட்டம்!

தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்தக் கோரி அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து அனுமதி கோரி வரும் நிலையில், இது குறித்து புதுச்சேரி சபாநாயகர் ஆர். செல்வம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்தி மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்கு அனுமதி மறுப்பது குறித்த சிக்கல் வலுத்துள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஆர். செல்வம், விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்குவது "சரியானது கிடையாது" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ரோடு ஷோ குறித்து விளக்கம் அளிப்பதற்காக, சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கரூரில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த இழப்புக்குப் பிறகு நம்முடைய புதுச்சேரியில் இது போன்ற ரோடு ஷோ நடத்துவது சரியானது கிடையாது.

தமிழகத்தை போன்று பெரிய விரிவான சாலைகள் புதுச்சேரியில் கிடையாது. விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்ட காலாப்பட்டு முதல் கன்னியகோவில் வரையுள்ள பகுதி மக்கள் அதிக நடமாட்டம் காணக்கூடிய, நெரிசல் மிக்க பகுதி ஆகும். விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கோரி த.வெ.க. தலைவர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தவெகவின் விடாமுயற்சி: புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த அதிகாரிகள் மறுத்த போதும் தொடர் முயற்சி!

டிசம்பர் 5ஆம் தேதி ரோடு ஷோ நடத்துவதற்காக, காலாப்பட்டு முதல் கன்னியகோவில் வரை 'ரோடு ஷோ' நடத்தவும், சோனாம்பாளையத்தில் வாகனத்தின் மேல் இருந்து உரையாற்றவும் அனுமதி கோரி, முதல்வர் ரங்கசாமி மற்றும் டி.ஜி.பி. அலுவலகத்துக்குக் கட்சித் தலைவர்கள் கடந்த நவம்பர் 26ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர்.

டி.ஜி.பி. சந்திப்பு முயற்சி: கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதூர் அர்ஜூன் ஆசியர் உள்ளிட்டோர் டி.ஜி.பி. மற்றும் ஐ.ஜி. அலுவலகங்களுக்குச் சென்று கோரிக்கை வைத்தனர். அப்போது ஐ.ஜி. அஜித் குமார் சிங்லா, டி.ஜி.பி. ஊரில் இல்லை என்று கூறி, அவர்கள் திரும்பிய பின் வருமாறு பதிலளித்தார். இன்று (டிச. 2) நான்காவது முறையாகக் காவல் நிலையத்தை அணுகியபோதும் அனுமதி கிடைக்கவில்லை.

சபாநாயகர் செல்வம், ரோடு ஷோவுக்குப் பதிலாகத் த.வெ.க.வுக்கு மாற்று ஆலோசனையை வழங்கினார்.
புதுச்சேரியில் ரோடு ஷோவைத் தவிர்த்துப் பொதுக்கூட்டம் வேண்டுமானால் நடத்திக் கொள்ளலாம். அவர் பொதுக்கூட்டம் நடத்தினால் வரவேற்கத் தயார்". சனியகம் மைதானம் போன்ற பொது இடங்களில் பொதுக்கூட்டமாக நடத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி போலீஸ் வட்டாரங்கள், கரூரில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்திற்குப் பின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்குச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும், திறந்த திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவுக்கு நோ பர்மிஷன்..!! போலீஸ் அதிரடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share