ஐயப்பன் தங்கத்தை வீட்ல வச்சு பூஜை பண்ணா செல்வம் கொட்டும்! விசாரணையில் உளறிக் கொட்டிய ஜெயராம்!
'செல்வம் பெருகும் என கூறியதால், சபரிமலை அய்யப்பன் கோவில் நகைகளை வைத்து எங்கள் வீட்டில் பூஜை செய்தோம்' என, போலீசாரிடம் நடிகர் ஜெயராம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருந்து துவாரபாலகர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் 4 கிலோ எடை குறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை கோவில் முன்னாள் தந்திரி கண்டரரு ராஜீவரு, தலைமை அர்ச்சகர் போல செயல்பட்ட கர்நாடகா பெங்களூரை சேர்ந்த உன்னி கிருஷ்ணன் போத்தி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
விசாரணையின் போது சென்னை அசோக் நகரில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் தங்கக் கவசம் வைத்து பூஜை செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் சிக்கின. இதனால் சிறப்பு புலனாய்வு குழு நேற்று ஜெயராமின் வீட்டுக்கு சென்று சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது. அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு!! விசாரணை வலையில் ஜெயராம்!! வாக்குமூலத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்!
ஜெயராம் கூறியதாவது: "நான் கடந்த 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருகிறேன். இதனால் கோவிலின் முக்கிய பிரமுகரான உன்னி கிருஷ்ணன் போத்தியுடன் எனக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது.
துவாரபாலகர் சிலைகள் மற்றும் கருவறை கதவுகளில் இருந்த தங்கக் கவசங்களை சீரமைத்து மெருக்கேற்ற சென்னைக்கு கொண்டு வந்ததாக அவர் என்னிடம் கூறினார். மேலும் 'இந்த நகைகளை உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்' என்றும் சொன்னார்.
அவரது பேச்சை நம்பி எங்கள் வீட்டில் பூஜை செய்தோம். ஆனால் அது திருடப்பட்ட நகைகள் என்று எனக்கு தெரியாது. சபரிமலைக்கு சென்று வந்த பழக்கத்தால் அவரை முழுமையாக நம்பினேன். இந்த பூஜைக்காக அவருக்கு எந்த பணமும் கொடுக்கவில்லை.
அவர் எனக்கு கோவில் கருவறைக்குள் சென்று வழிபட உதவி செய்தார். நகை திருட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. மகரவிளக்கு பூஜையின் போது அவர் எனக்கு அறிமுகமானார். ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவனத்தில் நடந்த பூஜைக்கு அழைப்பின் பேரில் சென்றேன். எந்த நிதி பரிவர்த்தனையும் நடைபெறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குமூலம் சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜெயராம் மீது தற்போது எந்த குற்றச்சாட்டும் பதியப்படவில்லை என்றாலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தென்னிந்திய சினிமா வட்டாரத்திலும், பக்தர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு! மாஸ்டர் மைண்ட் தலைமை அர்ச்சகர் அதிரடி கைது! சதி திட்டம் அம்பலமான பின்னணி!!