சசிகலா - ஓபிஎஸ் இணைந்தால் யாருக்கு நஷ்டம்? டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி தரப்பு நடுக்கம்!
ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் இணைந்து செயல்பட்டால், தென் மாவட்ட ஓட்டுக்கள் பிரிந்து விடும் என, அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரன் அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியலில் மீண்டும் சசிகலா - பன்னீர்செல்வம் இணைப்பு பேசுபொருளாகியுள்ளது. அ.ம.மு.க. பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் இதை அறிந்து பெரும் அச்சத்தில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா புதிய கட்சி தொடங்கினாலோ அல்லது திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தில் இணைந்தாலோ, முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் பிரிந்து தினகரனின் செல்வாக்கு மேலும் சரியும் என்பதே அவரது பயம்.
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தபோது, அ.தி.மு.க.வை கைப்பற்ற தினகரன் திட்டமிட்டார். ஆனால் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவேன் என நம்பிய சசிகலா தினகரன் பேச்சை கேட்கவில்லை. இதனால் இருவரும் பிரிந்தனர்.
இதையும் படிங்க: வெள்ளைக்காரனையே விரட்டிய காங்கிரஸ்!! கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா? திமுக - காங்., போஸ்டர் யுத்தம்!
2017 முதல் பழனிசாமியை துரோகி என விமர்சித்த தினகரன், இப்போது அவருடனே கூட்டணி அமைத்துள்ளார். இது அ.ம.மு.க. நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு விலகி வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் தினகரனின் பலம் முக்குலத்தோர் ஓட்டுகள்தான். அதனால்தான் பாஜக தலைமை அவரை கூட்டணிக்குள் கொண்டு வந்தது. ஆனால் சசிகலா மீண்டும் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளார்.
முக்குலத்தோர் அடர்த்தியான தொகுதிகளில் மட்டும் களமிறங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை அழைத்துள்ளார்.
பழனிசாமியின் 10.5% வன்னியர் உள் ஒதுக்கீட்டை காட்டி, முக்குலத்தோர் சமூகத்துக்கு எதிராக பிரசாரம் செய்ய சசிகலா திட்டமிட்டுள்ளார். சசிகலா - பன்னீர்செல்வம் இணைப்பு நடந்தால், தென் மாவட்ட ஓட்டுகள் சிதறி தினகரனுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.
இதை உணர்ந்த தினகரன் இதுவரை சசிகலாவை ஒருமுறை கூட விமர்சிக்காதவர், தற்போது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறார். "சசிகலா திமுக ஏஜெண்ட், பிள்ளை பிடிப்பவர்கள் போல வேட்பாளர் பிடிக்கிறார், கட்சி தொடங்குவது என்றால் யாரும் நம்ப வேண்டாம்" என விமர்சித்துள்ளார். பன்னீர்செல்வத்திடமும் "சசிகலா பேச்சை கேட்க வேண்டாம்" என கூறியுள்ளார். பன்னீர் கேட்காததால், அவரை "பசு தோல் போர்த்திய புலி" என தாக்கியுள்ளார்.
இந்த இணைப்பு நடந்தால் தென் மாவட்டங்களில் அ.ம.மு.க.வுக்கு பெரும் சவால். 2026 தேர்தல் களத்தில் முக்குலத்தோர் ஓட்டுகள் எப்படி பிரியும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: தேமுதிகவில் அதிமுக நடத்தும் சீக்ரெட் ஆபரேஷன்! எடப்பாடி பழனிசாமி கொடுத்த அசைன்மென்ட்!