தேர்தல் ஆணையர் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது! உச்ச நீதிமன்றம் பகீர் கருத்து!
தேர்தல் ஆணையர் நியமனம் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக நீதிபதி திபாங்கர் தத்தா கருத்து தெரிவித்துள்ள நிலையில், வழக்கை தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வுக் குழுவிலிருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, மத்திய அமைச்சரைச் சேர்த்து மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய 2023-ஆம் ஆண்டு திருத்தச் சட்டம் நடுநிலையானது அல்ல என்றும், தேர்தல் ஆணையர் நியமன நடைமுறையானது முழுமையாக மத்திய அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது என்றும் உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்துள்ளதுடன், இவ்வழக்கை விரிவான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்கத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக 2023-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும் என வரலாற்றுத் தீர்ப்பளித்தது. ஆனால், அந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய மத்திய பாஜக அரசு, தலைமை நீதிபதிக்குப் பதிலாகப் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு மத்திய அமைச்சரைத் தேர்வுக் குழுவில் சேர்த்தது.
மத்திய அரசின் இத்தகைய நிர்வாக ஆதிக்கத்தை எதிர்த்தும், தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சியைப் பாதுகாக்கவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் நீதிபதிகள் திபாங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு கோரியிருந்த நிலையில், நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட கருத்துகளுடன் கூடிய தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: இடைத் தேர்தல்.. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்..! அதிரடி சோதனையில் சிக்கிய விவகாரம்..!!
தீர்ப்பை வாசித்த முதல் நீதிபதியான திபாங்கர் தத்தா மத்திய அரசின் அணுகுமுறையை மிகக் கடுமையாக விமர்சித்துப் பல அதிரடி கருத்துகளைப் பதிவு செய்தார். ஐந்து நாட்கள் விரிவான வாதங்கள் முடிந்த பிறகு, வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை வைப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுவில் நடுநிலையான ஒரு மூன்றாம் நபர் இடம்பெறாத இந்த நடைமுறை 'பொது மக்களின் நம்பகத்தன்மை சோதனையில்' (Perception Trust) தோல்வியடைந்துவிட்டது.
பிரதமர் தலைமையிலான குழுவில் அவரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் எப்படிப் பிரதமரின் முடிவை எதிர்ப்பார்? அமைச்சர் எதிர்த்தால் அவரது பதவியே பறிபோகும் அபாயம் இருக்கும். இதனால் பிரதமர் முடிவு செய்யும் நபரே தேர்தல் ஆணையராக வருவார் என்பதால், எதிர்க்கட்சித் தலைவர் குழுவில் அமர்ந்திருப்பது வெறும் கண் துடைப்பு அலங்காரம் மட்டுமே. இதன் மூலம் தேர்தல் ஆணையர் தேர்வு முழுமையாக அரசின் ஏகபோகக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என்ற மனுதாரர்களின் வாதத்தில் அசைக்க முடியாத உண்மைத்தன்மை உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் கிரிக்கெட் உதாரணத்தை மேற்கோள் காட்டிய நீதிபதி திபாங்கர் தத்தா, ஒரு கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்யும் அணியின் கேப்டனே நடுவரைத் தேர்வு செய்தால், அந்த நடுவர் நியாயமான தீர்ப்பை வழங்கினாலும் கூட அதில் மக்களின் பார்வைக்குச் சந்தேகம் எழத்தான் செய்யும். அதுபோலவே, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் என்பது வெளிப்படையான, சுதந்திரமான தேர்தல் ஆணையத்தைச் சார்ந்தது மட்டுமே.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது மட்டும் போதாது; அது சுதந்திரமாகச் செயல்படுவது போலப் பொதுமக்களின் பார்வைக்கும் தெரிய வேண்டும் என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார். அரசியலமைப்புப் பிரிவு 324(2)-ன் படி தேர்தல் ஆணையம் நிர்வாகப் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்ற கொள்கை ஏற்கனவே முந்தைய தீர்ப்புகளில் தெளிவுபடுத்தப்பட்டு விட்டதால், வழக்கை உயர் அமர்வுக்கு அனுப்பத் தேவையில்லை என அவர் கருத்துத் தெரிவித்தார்.
அதேசமயம், இரண்டாவது நீதிபதியான சதீஷ் சந்திர சர்மா தனது தீர்ப்பில், தேர்தல் ஆணையர் தேர்வுக்கான நாடாளுமன்றச் சட்டத்தில் நடுநிலையான ஒருவரைச் சேர்க்காதது என்பது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட நியாயமான நடவடிக்கையா என்பது அரசியலமைப்பு விளக்கம் பெற வேண்டிய முதன்மையான சட்டப் பிரச்சனை ஆகும். எனவே, அரசியலமைப்புப் பிரிவு 145(3)-ன் படி இதில் எழுந்துள்ள ஆழமான கேள்விகளுக்கு விடை காண இந்த வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதே பொருத்தமானது எனக் குறிப்பிட்டார்.
இரண்டு நீதிபதிகளும் உயர் அமர்வுக்கு மாற்றுவதில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், வழக்கை மேலும் தாமதப்படுத்தாமல் தவிர்ப்பதற்காக, இவ்வழக்கில் உரிய அரசியல் சாசன அமர்வை அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே இறுதி முடிவெடுக்க வேண்டும் என வழக்கை அவரிடம் ஒருமனதாகப் பரிந்துரைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: திரிணமூல் பிளவு.. இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கம்! மம்தா பானர்ஜிக்கு கால்பந்து வீரர் சின்னம்!