×
 

திமுக பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 24 விசாரணை மரணங்கள்... சீமான் பகீர் ரிப்போர்ட்!!

நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும் விசாரணை படுகொலைகளே சாட்சி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.

காவல்துறை விசாரணையின்போது நடைபெறும் படுகொலைகளில் குஜராத்தை பின்னுக்கு தள்ளி தென்மாநிலங்களில் முதலிடம் பெற்றிருப்பதுதான் தீய திராவிட மாடல் அரசின் ஈடு இணையற்ற சாதனை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நபர்மீது கொல்லப்படும் அளவிற்கு கொடுந்தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் என்ன?

அவர் என்ன பயங்கரவாதியா? என்று திராவிட மாடல் ஆட்சியின் முகத்தில் அறைந்ததுபோன்று மாண்பமை உயர்நீதிமன்றம் எழுப்புயுள்ள கேள்விக்கு தமிழ்நாடு அரசின் பதிலென்ன? கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் காவல்நிலைய விசாரணையில் படுகொலை செய்யப்பட்டபோது கடுமையாக கண்டித்து கொதித்து கொந்தளித்த தற்போதைய முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, ஒரு திருட்டு புகாருக்காக, முதல் தகவல் அறிக்கை பதியாமலேயே விசாரணை என்ற பெயரில் தம்பி அஜித்குமாரை கொன்றது ஏன்?

இரும்பு கம்பிகளை வைத்தும், மிளகாய் பொடி தூவியும் உயிர்போகும் அளவிற்கு தம்பி அஜித்குமாரை கடுமையாக தாக்கியது ஏன்? சாதாரண திருட்டு வழக்கிற்கு ஆறு தனிப்படை காவலர்களை வைத்து விசாரணை செய்தது ஏன்? காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லாமல், வேறிடத்தில் வைத்து இரண்டு நாட்கள் விசாரிக்க வேண்டிய அவசியமென்ன? கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தம்பி அஜித்குமாரை நீதிபதி முன் நேர் நிற்க வைக்காதது எதனால்? தம்பி அஜித்குமார் கொல்லப்பட்ட பிறகும் அவருடைய மரணத்தை குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல் தாமதித்தது ஏன்? தம்பி அஜித்குமார் உடலில் தலை, கை, கால்கள் என 18 இடங்களில் கொடுங்காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வில் தெரியவந்த பிறகும், இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் மீது இதுவரை திமுக அரசு கொலை வழக்கு பதிவு செய்யாதது ஏன்?

கொடிய போதை பொருள் விற்பன்னர்களும், கோடி கோடியாய் ஊழல் புரியும் திமுக அமைச்சர் பெருமக்களும், பொள்ளாச்சி முதல் அண்ணா பல்கலை வரை பாலியல் குற்றவாளிகள் பாதுகாப்பாக வாழும் அப்பாவின் ஆட்சியில், ஐயத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கொங்கு மண்டல தோட்டங்களில் நடைபெறும் தொடர் படுகொலைகளை தடுக்க திறனற்ற திமுக அரசின் காவல்துறை, அக்கொடுங்குற்றவாளிகள் மீது காட்டாத அடக்குமுறையும், கடைப்பிடிக்காத விதிமுறையும் ஏதுமறியா எளிய மக்கள் மீது காட்டுவது ஏன்?

இதையும் படிங்க: நின்னா வரி, நடந்தா வரி.. சோத்துக்கு கையேந்த வச்சு வயித்துல அடிக்க பாக்குறீங்களா? விளாசிய சீமான்..!

பல நூறு சவரன் நகைகள் காணாமலும் பதறாத காவல்துறையினர், பத்து சவரன் நகைக்காக வழக்குகூட பதியாத முறைகேடான விசாரணையில் உயிர்போகும் அளவுக்கு தாக்கியது எதனால்? எந்த சாரின் உத்தரவின் பேரில் இக்கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றது? எந்த சாரை மகிழ்விக்க தம்பி அஜித்குமாரின் உயிர் பறிக்கப்பட்டது? அவருடைய உறவினர்களிடம் பேரம் பேசி, உடலை வாங்கிச் செல்ல மிரட்டுவதும், உடலை விரைந்து புதைத்து ஆதாரத்தை அழிக்க காவல்துறையும், திமுக ஆட்சியாளர்களும் இத்தனை தீவிரம் காட்டியது எதனால்? எந்த சாரை தப்ப வைக்க இத்தனை நாடகங்கள் அரங்கேறியது? என்று அடுக்கடுக்காய் எழுப்படும் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மாண்புமிகு முதல்வர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைதிகாப்பது ஏன்?

ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உருகிய முதல்வருக்கு தம்முடைய ஆட்சியில், தாம் நேரடியாக நிர்வகிக்கும் துறையின் கீழ் நடைபெறும் படுகொலைகள் உள்ளத்தை உலுக்கவில்லையா? கடமை தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறும் முதலமைச்சர், இதுவரை கடமை தவறிய காவலர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி, நாள்தோறும் நடைபெறும் படுகொலைகளை தடுத்து மக்களை பாதுகாப்பதில் காட்டாத ஆர்வமும், வேகமும் விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை அடித்துக்கொல்வதில் தமிழ்நாடு காவல்துறை காட்டுவதுதான் அப்பாவின் ஆட்சியின் அசைக்க முடியாத சாதனையாகும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் 24 விசாரணை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல் கூறுகின்றது. ஆனால், உண்மையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை விசாரணையின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பதை தாண்டும். திமுக ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு 10 விசாரணை மரணங்களும், 2022 ஆம் ஆண்டு 11 விசாரணை மரணங்களும், 2023 ஆம் ஆண்டு 7 விசாரணை மரணங்களும், 2024 ஆம் ஆண்டு 9 விசாரணை மரணங்களும் காவல்துறை விசாரணையின்போது நடைபெற்றதாக தெரிய வருகிறது.

நடப்பாண்டில் நடைபெற்றுள்ள விசாரணை மரணங்கள் இவற்றில் கணக்கிடப்படவில்லை. காவல்துறை விசாரணையின்போது நடைபெறும் படுகொலைகளில் குஜராத்தை பின்னுக்கு தள்ளி தென்மாநிலங்களில் முதலிடம் பெற்றிருப்பதுதான் தீய திராவிட மாடல் அரசின் ஈடு இணையற்ற சாதனையாகும். நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும் விசாரணை படுகொலைகளே சாட்சி! என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: நடிகர்கள் ஶ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள் தான்.. இதுல வேற விஷயம் இருக்கு! சீமான் தடாலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share