சோறு கூட இல்ல..!! வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள்... மீட்டு வர சீமான் வலியுறுத்தல்..!!
இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் உணவின்றி சிக்கித்தவிக்கும் மீனவச்சொந்தங்கள் உட்பட தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கடும் போர் மூண்டுள்ள ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் பல்வேறு பணிகளுக்காகச் சென்றுள்ள தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித்தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்றார்.
அரசுகளுக்கு இடையே நடக்கும் அதிகாரப் போரில் அதிகம் பாதிக்கப்படுவதும், பலியாவதும் அங்கு வாழும் அப்பாவி மக்கள்தான் என்றும் ஏற்கனவே பாலஸ்தீனத்தின் காசாவிலும், உக்ரைனிலும் நடைபெறும் போரில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், பல இலட்சம் மக்கள் பசியிலும் வறுமையிலும் உணவுக்காக அலைகின்ற காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றது என்றும் கூறினார்.
இந்நிலையில் ஈரான்-இஸ்ரேல் இடையே தற்போது மூண்டுள்ள போரால் மேலும் பல இலட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படும் துயரமும் நிகழ்ந்தேறுகின்றது என்றும் அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிலிருந்து குடும்ப வறுமைச்சூழல் காரணமாகப் பொருளாதாரம் தேடி, இஸ்ரேல், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்குப் பணிக்குச் சென்றுள்ள தங்கள் உறவினர் நிலையறியாது அவர்களுடைய குடும்பத்தினர் தவித்து வருவதாகவும் சீமான் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: “இந்த நாய்களிடம் சிக்க வேண்டாம்...” - சீமானை சீண்டிய நாஞ்சில் சம்பத்... சிவகார்த்திகேயனையும் விட்டு வைக்கலையே...!
குறிப்பாக ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற பல நூறு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அங்கிருந்து தாயகம் திரும்ப போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் சிக்கித்தவிக்கும் மீனவர்கள் உள்ளிட்ட தமிழ் மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டுவந்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி இருக்கிறார். தமிழ்நாடு அரசும், வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சகத்தின் மூலமும், இந்திய ஒன்றிய அரசின் தூதரகங்கள் மூலமும் தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தி பயணச்செலவை அரசுகளே முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "பிம்பிளிக்கி பிளாப்பி"..! பிளாப் ஆகப்போகுது தமிழ்நாடு... சீமான் கலாய்..!!