உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை பறிப்பதா.? இதுதான் ஜனநாயகன் ஆட்சியா.? விளாசிய சீமான்..!!
உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை பறிப்பதா என சீமான் கேள்வி எழுப்பினார்.
நிலங்களின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறிக்கும் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். நிலங்களின் மீதான ஊராட்சி அமைப்புகளின் அதிகாரத்தை முழுவதுமாகப் பறித்து, அவற்றை நேரடியாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தவெக அரசு நிறைவேற்றியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்றார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதிநாளில் வளர்ச்சி, நில மேம்பாடு என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களைப் பறித்து தனியார் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தைத் தவெக அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். தவெக அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்திருத்தம் உள்ளாட்சிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே எந்த ஒரு தொழிற்சாலையும் கொண்டுவர முடியும் என்ற குறைந்தபட்ச ஜனநாயக வழிமுறையையும் துடைத்தெறிந்துள்ளது என்றும் கூறினார்.
இப்புதிய திருத்த வரைவின் படி, விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளைக் கையகப்படுத்த இனி ஊராட்சி அமைப்புகளிடமோ, மாவட்ட ஆட்சியரிடமோ, தொடர்புடைய விவசாயிகளிடமோ, கருத்துக்கேட்கவோ, ஒப்புதல் பெறவோ தேவையில்லை. மேலும், விளைநிலங்களை, வேறு பணிகளுக்காக அரசு கையகப்படுத்தும்போது முடிவெடுக்கும் அதிகாரம் இதுவரை மாவட்ட ஆட்சியரிடம் இருந்துவந்தது எனவும் கூறினார். அதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றுகூறி, நிலத்தை விரைந்து கையகப்படுத்த வசதியாக, நகரத் திட்ட இயக்குநரே இனி நேரடியாக முடிவெடுத்து ஒப்புதல் அளிக்கலாம் என்று அதிகாரத்தை மாற்றி வரையறுக்கிறது இப்புதியச் சட்டத்திருத்தம் என்றார்.
இதையும் படிங்க: தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!
விவசாயிகளை நிலமற்ற அகதிகளாக்கும் இப்படியொரு எதேச்சதிகார சட்டத்திருத்தத்தை தவெக நிறைவேற்றியது ஏன்? தமிழ்நாட்டு விவசாயிகளை விடவும், தனியார் பெருமுதலாளிகளின் நலன் மட்டும்தான் தவெக அரசுக்கு முதன்மையானதா? நிலங்களை உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதலின்றி அபகரிக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டுவர எப்படி அனுமதித்தார்? பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் ஒப்புதல் இன்றித் தலைமைச்செயலகம் கட்டுவதற்காகவா? இதுதான் ஜனநாயகமா? இதற்குப் பெயர்தான் ஜனநாயகன் ஆட்சியா? என சரமாரி கேள்விகளை சீமான் முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: "துக்ளக் தர்பார்"..! பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்..! சவால்விட்ட சீமான்.!!