எடப்பாடியில ஏன் தவெக போட்டியிடல? பாஜ போட்டியிடுற தொகுதியில விஜய் ஏன் பிரசாரம் செய்யல? சீமான் கேள்வி!
விஜய் பேசும்போது தவெக, திமுக இடையே போட்டி என்கிறார். எடப்பாடி தொகுதியில் தவெக ஏன் போட்டி போடவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுக்கோட்டை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய்யின் பேச்சுகளுக்கு கடுமையான கேள்வி எழுப்பினார். “விஜய் பேசும்போது தவெக-திமுக இடையே போட்டி என்கிறார். அப்படியென்றால் எடப்பாடி தொகுதியில் தவெக ஏன் போட்டி போடவில்லை?” என்று நிருபர்களிடம் கேட்டார்.
புதுக்கோட்டையில் நிருபர்களை சந்தித்த சீமான், தமிழகத்தில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை பாஜ அரசு குறைக்க முயற்சிப்பதாக விமர்சித்தார். “3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு எம்பி தேவை. மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதிகளை முடிவு செய்யக் கூடாது. மகளிர்க்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் தொகுதி மறுசீரமைப்புக்கும் என்ன தொடர்பு?” என்று கேள்வி எழுப்பினார்.
“பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவதாகச் சொல்லி, ஆண்களுக்கான எண்ணிக்கை குறையக் கூடாது என்பது ஆணாதிக்க சிந்தனை. தொகுதிகளை அதிகரித்தால்தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவோம் என்பது என்ன மாதிரியான மனநிலை?” என்று கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கு அட்வைஸ் சொன்ன விஜயபிரபாகரன் நிலை பரிதாபம்! தேமுதிகவுக்கு செக் வைத்த காங்.,!
விஜய்யின் பேச்சை நேரடியாக சுட்டிக்காட்டிய சீமான், “விஜய் பேசும்போது தவெக-திமுக இடையே போட்டி என்கிறார். எடப்பாடி தொகுதியில் தவெக ஏன் போட்டி போடவில்லை? முதல்வர், துணை முதல்வர், பாஜ நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கு விஜய் பிரசாரம் செல்லவில்லை. காரைக்குடி தொகுதிக்குத்தான் விஜய் செல்கிறார். அப்போது விஜய்க்கு போட்டி யாருடன்?” என்று கேள்வி எழுப்பினார்.
“நான் காரைக்குடிக்கான ஆள் இல்லை. ஒட்டுமொத்த தமிழ்குடிக்கான ஆள். நாட்டையே வெல்ல போராடுகிறேன்” என்று தனது நிலைப்பாட்டை தெளிவாக்கினார் சீமான்.
தமிழக அரசியலில் தவெக-திமுக இடையேயான போட்டி குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சீமானின் இந்தக் கருத்துகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட தேசிய அளவிலான பிரச்சினைகளையும் அவர் முன்வைத்தார். தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் வேளையில், இந்தப் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாம்பழ சின்னம் வழக்கு! சென்னை ஐகோர்ட் மறுப்பு!! பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சறுக்கல்!!