இந்து - இஸ்லாமியர்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்கிறோம் - எங்களுக்கு அரசியல் நோக்கம் இல்லை - செல்லூர் ராஜு விளக்கம்!
மதுரை மாநகரில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளாகவே வாழ்ந்து வருவதாகத் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகரில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளாக வாழ்வதாகக் கொள்கை விளக்கம் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகளுக்குத் தங்கள் கட்சி ஆதரவு அளித்தது நட்பு ரீதியானது மட்டுமே என்றும், இதில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என்றும் இன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பகிரங்கமாக விளக்கமளித்தார். திமுகதான் மதங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செல்லூர் ராஜு, அதிரடி விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், மாநகராட்சியின் குடிநீர்த் தேவைக்கான அம்ரூத் திட்டம் முல்லைப்பெரியாரிலிருந்து செயல்படுத்தப்பட்டும், அது முழுமையடையாமலேயே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை அவசர கதியில் திறந்துவைக்கிறார் என்றும், எதற்காக இவ்வளவு அவசரம் என்றும் கேள்வியெழுப்பினார். மேலும், இரண்டு மாதங்களாக மேயர் இல்லாததால் மாநகராட்சிப் பணிகள் முடங்கிக் கிடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் களத்தின் முக்கியப் புள்ளிவிவரங்கள் குறித்துப் பேசிய அவர், தமிழக அரசியலில் இப்போது மக்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவர் மட்டுமே இருப்பதாகவும், புதிதாக யார் வந்தாலும் அது எடுபடாது என்றும் தீர்க்கமாகக் கூறினார். மேலும், நடிகர் விஜய் குறித்துப் பேசுகையில், "காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல்தான் தானும் முதல்வர் ஆவேன் என விஜய் பேசிக் கொண்டிருக்கிறார்" என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இதையும் படிங்க: மதுரை: புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்..!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி விட்டுச் சென்றது குறித்துப் பேசிய அவர், அது அதிமுக எனும் ஆல மரத்தில் ஒரு இலை உதிர்வது போல்தான் என்றும், ஒரு பழுத்த இலை கீழே விழுவதால் ஆலமரம் சாய்ந்துவிடாது என்றும் அரசியல் தத்துவத்தை எடுத்துரைத்தார். செங்கோட்டையனுக்கு மக்கள் ஓட்டுப் போடவில்லை, இரட்டை இலைக்காகவும், அதிமுகவுக்காகவும்தான் மக்கள் ஓட்டுப் போட்டார்கள் என்று சாட்டையடி கொடுத்த அவர், கடைசி வரை எம்.ஜி.ஆர். கட்சியில் தான் இருப்பேன் என்று சொல்பவர்தான் உண்மையில் ரோஷமுள்ளவர் என்றும் எதிர்த்தாக்குதல் தொடுத்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை, அதிமுக சார்பில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா சென்று சந்தித்தது மனிதாபிமான அடிப்படையில்தான் என்றும், நட்பின் அடிப்படையில் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தோம் என்றும் செல்லூர் ராஜு தெளிவுபடுத்தினார். "நாங்கள் என்ன பாஜகவுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்தோமா? இல்லையே. கூட்டணி என்பது தோளில் போடப்பட்ட துண்டு போன்றது. கூட்டணியில் இருந்தாலும் கொள்கை தனித்தனியாகவே இருக்கும். தேர்தலில் பார்ட்னராக இருப்போம்" என்று அவர் தனது கூட்டணிக் கோட்பாட்டை விளக்கினார். எந்த நிலைமை வந்தாலும் தாம் அதிமுக வேட்டியை மாற்ற மாட்டேன் என்றும் அவர் சத்தியப்பிரமாணம் செய்தார்.
இதையும் படிங்க: தீபத் தூண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இரவு விசாரணை இல்லை; இன்று தனி நீதிபதி விசாரணை!