கை கொடுக்குமா கோபிசெட்டிபாளையம்? முதல் முறையாக தவெகவில் களம் காணும் செங்கோட்டையன்... வேட்பு மனுத் தாக்கல்..!!
தமிழக வெற்றி கழகத்தில் முதல் முறையாக தேர்தல் களம் காணும் செங்கோட்டையன் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த பின்னர் முதன்முறையாக தேர்தல் களத்தில் குதிக்கிறார்.செங்கோட்டையன், தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்டவர்.
அதிமுகவில் பல ஆண்டுகள் முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் எட்டு முறையும், சத்தியமங்கலம் தொகுதியில் ஒரு முறையும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். அவரது அரசியல் பயணம் மக்களுடனான நெருக்கமான தொடர்பு மற்றும் பல்வேறு திட்டங்களின் மூலம் பகுதி மக்களுக்கு ஆற்றிய சேவையால் அடையாளம் காணப்படுகிறது. கடந்த நவம்பர் 2025-ல் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், அவர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
அதைத் தொடர்ந்து, தவெகவின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் அவர் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு உள்ளிட்ட பல முக்கிய அமைப்புகளில் செயல்பட்டு வருகிறார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக சமீபத்தில் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முடிவை கட்சி அறிவித்துள்ள நிலையில், செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவர் தனது தொகுதியில் மக்களின் ஆதரவு வலுவாக இருப்பதாகவும், தனது நீண்டகால பணியின் அடிப்படையில் வெற்றி உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: #BREAKING: விசில் போடு..! HOTSPOT- ஆன பெரம்பூர்… தவெக தலைவர் விஜய் வேட்பு மனுத் தாக்கல்…!
இன்று தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. செங்கோட்டையன் தனது கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்றார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக பெரியாரின் முழு உருவச் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து தொண்டர்கள் புடைசூழ செங்கோட்டையன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: உங்க விஜய்... நான் வரேன்..!! பெரம்பூரில் விஜய் வேட்பு மனுத் தாக்கல்... தொண்டர்கள் செம்ம குஷி..!!