விஜய்க்காக என் ரத்தம் சிந்துவேன்! மேடையிலேயே கண் கலங்கிய செங்கோட்டையன்!
வழி தெரியாமல் தவித்த எனக்கு வழிகாட்டியவர் விஜய் தான் என உருக்கமாகப் பேசிய தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மேடையிலேயே கண் கலங்கினார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தவெக மாநிலத் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுக்கு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், தனது அரசியல் பயணத்தின் கசப்பான பக்கங்களையும், தவெக-வில் தனக்குக் கிடைத்துள்ள கௌரவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "புரட்சித்தலைவி அம்மாவோடு பயணித்த காலம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவருக்குப் பிறகு நான் ஒருவரை (எடப்பாடி பழனிசாமி) அடையாளம் காட்டினேன். நான் அடையாளம் காட்டிய அவரே, இறுதியில் என்னை அடையாளம் காட்டி கட்சியை விட்டு அனுப்பிவிட்டார். அவருடன் இருந்திருந்தால் நான் இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பேன். ஆனால், தளபதி விஜய் எனக்கு நல்ல இடத்தைக் காட்டி முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்" என்று கூறினார். தொடர்ந்து பேசுகையில் உணர்ச்சிவசப்பட்ட அவர், "வழி தெரியாமல் நின்ற எனக்கு வழிகாட்டியவர் விஜய். இன்றைக்குச் சொல்கிறேன், என் உடலில் ஓடுகிற ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காகத் தான்" எனக் கூறி மேடையிலேயே கண் கலங்கினார். இதைக் கண்டு ஆவேசமடைந்த தொண்டர்கள், 'செங்கோட்டையன் வாழ்க' என முழக்கமிட்டு அவரைச் சமாதானம் செய்தனர்.
அதிமுக - பாஜக கூட்டணி குறித்துப் பேசிய அவர், "அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. தவளை தண்ணீருக்கு இழுக்கும், ஓநாய் மேட்டுக்கு இழுக்கும் என்பார்களே, அந்தக் கதையாகத் தான் அவர்களின் கூட்டணி உள்ளது" என எள்ளி நகையாடினார். மேலும், "ஆண்டுக்கு ஆயிரம் கோடி சம்பாதிக்கும் வாய்ப்பைத் துறந்துவிட்டு மக்களுக்காக விஜய் வந்துள்ளார். ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கும். வரும் 2026 தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, விஜய் நிரந்தர முதலமைச்சராகப் பதவியேற்பார்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "விஜய் ஒருத்தரால தான் முடியும்!" அதிமுக டூ தவெக.. மொத்தமா களமிறங்கும் புள்ளிகள்!
இதையும் படிங்க: “விஜய் அருகில் நின்னா தூய்மை ஆகிடுவாங்களா?” – சிபிஐ வீரபாண்டியன் கேள்வி!