அவர்களின் தகுதி அவ்வளவுதான்! உதயநிதி, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் கடும் விமர்சனம்!!
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றி கழக கூட்டணி 100-க்கு 200 சதவீதம் வெற்றி பெறும் என்றார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றி கழக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும், இரு தொகுதிகளிலும் குறைந்தது 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் கே.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
கோபிசெட்டிபாளையம் அருகே பொலவக்காளிபாளையம்–எல்லமடை இடையேயான வழித்தடத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் அமைச்சர் கே.செங்கோட்டையன் கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
எல்லமடை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு செல்வதற்காக தினமும் சுமார் 4 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்ததாக கூறப்படுகிறது. பேருந்து சேவையை மீண்டும் இயக்கக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஈரோடு–சத்தியமங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!
இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது அந்த வழித்தடத்தில் மீண்டும் பேருந்து இயக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேருந்து சேவை திரும்பியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றி கழக கூட்டணி 100-க்கு 200 சதவீதம் வெற்றி பெறும் என்றார். கள நிலவரத்தைப் பார்க்கும்போது, இரு தொகுதிகளிலும் மற்ற எதிர்க்கட்சிகளை விட குறைந்தது 75 ஆயிரம் வாக்குகள் அதிகமாகப் பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசு நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், அரசுக்கு ரூ.13 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதாகவும், தினமும் ரூ.342 கோடி வட்டி செலுத்தப்பட்டாலும் மக்கள் பணிகளில் தொய்வு இல்லை என்றும் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த விவகாரம் குறித்தும் செங்கோட்டையன் விமர்சனம் செய்தார். அரசியலில் நாகரிகமான பேச்சு அவசியம் என்றும், பொதுவெளியில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது தவறு என்றும் அவர் கூறினார். எடப்பாடி பழனிசாமி குறித்தும் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.
இதையும் படிங்க: #BREAKING செங்கோட்டையன் தலையில் இறங்கியது பேரிடி... அஸ்திரத்தை கையில் எடுத்த அதிமுக... உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...!