×
 

தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி?! குதிரை பேர வழக்கு: செந்தில்பாலாஜி, அசோக்குமாரிடம் 2-வது நாளாக விசாரணை!

தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசிய வழக்கில் கையெழுத்திட வந்த செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக்குமார் ஆகிய இருவரிடமும் போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரிடம் போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் ‘மேகாலயா புராஜக்ட்’ என்ற பெயரில் மிகப்பெரிய அரசியல் சதி திட்டம் நடைபெற்றதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 15 எம்.எல்.ஏ.க்களை அணுகி ஆட்சி மாற்ற முயற்சி செய்யப்பட்டதாகவும், தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: 'குதிரை பேர' வழக்கில் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்... காவல் நிலையத்தில் கையெழுத்து கட்டாயம்!

இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இருவரும் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர்.

முன்ஜாமீன் நிபந்தனைகளின்படி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி, செந்தில்பாலாஜியும் அசோக்குமாரும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற முதல் நாள் விசாரணையில், துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீஸ் குழு இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தியது.

வழக்கு தொடர்பாக போலீசார் கைப்பற்றிய ஆவணங்கள், தொடர்புகள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2-வது நாளாகவும் இருவரிடமும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், போலீசார் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அரசியல் வட்டாரத்திலும் இந்த விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: செந்தில்பாலாஜி பெயர் இடம்பெற்ற 'ஆப்ரேஷன் மேகாலயா'... 15 எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த மெகா திட்டம்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share